30 அக்டோபர், 2009

கண்டி வைத்தியசாலையில் இரண்டு மருந்து குப்பிகளில் கண்ணாடி துண்டுகள் கண்டுபிடிப்பு
கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை நோயாளர் ஒருவருக்கு ஏற்றப்படவிருந்த ஊசி மருந்து குப்பியில் கண்ணாடி துண்டுகள் இருக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி சி.குணதிலக்க தெரிவித்தார்.

வைத்தியசாலையின் 64ஆம் இலக்க வார்ட்டில் இரண்டு மருந்துக் குப்பிகளில் இவ்வாறு கண்ணாடி துண்டுகள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் தாதியர்கள் வைத்தியசாலை உயர்மட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த கண்ணாடித் துண்டுகள் காணப்படுகின்ற மருந்துக் குப்பிகளைப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

மேலும், தங்காலை பிரதேசத்திலும் வைத்தியசாலை ஒன்றில் மருந்து குப்பியில் கண்ணாடி துண்டுகள் இருந்தமையை நேற்று முன்தினம் வைத்தியசாலை நிர்வாகம் கண்டு பிடித்தது. இதனையடுத்து குறித்த மருந்துக்குப்பிகள் அம்பாந்தோட்ட மாவட்ட வைத்திய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த மருந்து குப்பி வகைகளை விநியோகித்துள்ள ஆறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை முக்கிய விசாரணை ஒன்றுக்கு சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை அழைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சுத் தகவல்கள் தெரிவித்தன.

ரவி கருணாநாயக்க எம்.பி.

அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறுகையில், "சுகாதார அமைச்சர் ஏதோ ஊசி ஒன்றை உட்செலுத்திக் கொண்டவர்போன்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டால் விளம்பரங்களை நிறுத்தி விடுவதாக அமைச்சர் அச்சுறுத்துகின்றார். நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை" என்றார்.

சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகையில், "நியாயமான முறையில் சிக்கல்களின்றி சிகிச்சை பெறும் எண்ணத்துடனேயே நோயாளர்கள் அரசாங்க வைத்தியசாலைகளை நாடுகின்றனர். ஆனால், அவ்வாறான அடிப்படை உரிமை கூட இன்று மறுக்கப்படுகின்றது. எனினும் அரசாங்கம் மௌனம் சாதிக்கின்றது. சுகாதார அமைச்சர் என்ன கூறுகின்றார் என்று தெரியவில்லை" என்றார்.

அநுர பிரியதர்ஷன யாப்பா

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்,

"சுகாதார அமைச்சு ஒரு நோய்க்காக மருந்துகளை கொள்வனவு செய்வதில்லை. இது பாரிய ஒரு வேலைத்திட்டம். இதன்போது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது என்பதற்காக முழு சுகாதார தொகுதியையும் குறை கூறமுடியாது. எனினும் சம்பந்தப்பட்ட மருந்துக் குப்பிகளை விற்பனை செய்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இருநூறு மற்றும் ஆயிரம் என அதிகளவான கட்டில்கள் உள்ள வைத்தியசாலைகள் இலங்கையிலேயே அமைந்துள்ளன என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக