கடலில் மூழ்கி இளைஞர் மரணம் : பொலிஸ் உத்தியோகத்தர் கைது
நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது.
இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டினார்.
இவ்விளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கும் ஏனையோரை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சற்று முன்கிடைத்த செய்தி
சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப் பாதையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுப் பகல் வேளையின் போது, வீதியில் செல்லும் வாகனங்களுக்குக் கல் எறிந்துள்ளார்.
இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ரயில் ஒன்றுக்குக் கல் எறிந்ததில் அதில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நீடித்துக்கொண்டிருந்ததால் கரை திரும்ப முடியாத அந்த இளைஞர் கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.
இதன் போது அவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணமானார் எனக் கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக