19 அக்டோபர், 2009

இந்திய வானில் அனுமதியின்றிப் பறந்த அமெ.விமானம் மும்பையில் தரையிறக்கம்



இராணுவ வீரர்களுடன் இந்திய வானில் அனுமதியின்றிப் பறந்த அமெரிக்க விமானம் மும்பையில் கட்டாயமாக தரையிறக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

வட அமெரிக்க ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 767 போயிங் விமானம் ஒன்று நேற்று காலை இந்தியாவுக்குப் பறந்தது. அமெரிக்க இராணுவம் வாடகைக்கு அமர்த்தியிருந்த அந்த விமானத்தில், 205 பயணிகளும், அமெரிக்க கடற்படை வீரர்களும் இருந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள பிஜிரியா என்ற நகரத்தில் இருந்து, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்கொக் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இந்திய எல்லைக்குள் அந்த விமானம் நேற்று காலை நுழைந்த போது, அதை மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கும்படி இந்திய விமானப்படை உத்தரவிட்டது.

அதன்படி காலை 7.25 மணியளவில் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் கட்டாயமாக தரையிறக்கப்பட்டு, ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டது.

உடனடியாக இந்திய விமானப்படை அதிகாரிகளும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் அந்த விமானத்துக்குச் சென்று, அமெரிக்க விமானிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விதிமுறைகளை மீறி....

"அந்த விமானத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால் விதிமுறைகளை மீறி அந்த விமானத்தில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதனால் அது கட்டாயமாக தரையிறங்கும்படி வயர்லஸ் மூலம் உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த விமானம் தரையிறக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது'' என்று இந்திய விமானப்படை அதிகாரி டி.கே.சின்கா தெரிவித்தார்.

இதுபற்றி அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,

"இது வழக்கமான நடைமுறைதான். சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

"அந்த விமானத்தில் இருந்து குழப்பமான சிக்னல் கிடைத்ததால் அது தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அந்த விமானம் செல்லலாம் என்று இந்திய விமானப்படை அனுமதி அளித்தது.

ஆனால் அந்த விமானம் எப்போது செல்லலாம் என்று விமானப் போக்குவரத்து ஆணையம்தான் முடிவு செய்யும்'' என்று மும்பை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த நிலையில், அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானியின் வேலை நேரம் முடிந்து விட்டது என்றும், அதனால் உடனடியாக புறப்பட வில்லை என்றும், ஆகவே இன்றுதான் அந்த விமானம் புறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் முதல் இது போன்று விதிகளை மீறி இந்திய வானில் பறந்த 3 வெளிநாட்டு விமானங்கள் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இது 4ஆவது சம்பவமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக