19 அக்டோபர், 2009

200910.19.எம். பி . பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷ நாளை ராஜிநாமா




நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ எம்.பி. நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றியதன் பின்னர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துக்கொண்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பசில் ராஜபக்ஷ அன்வர் ஸ்மைல் எம்.பியின் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பசில் எம்.பியின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவரை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே எம்.பியின் பதவி வெற்றிடத்தை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலையா? அல்லது நாடாளுமன்றத் தேர்தலையா? முதலில் நடத்துவது என்பது தொடர்பில் அடுத்தமாதம் 15 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக