மன்னார் படைமுகாமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம், இரு படைவீரர்கள் பலி, ஒருவர் காயம்-
குருநாகல் வேன் குண்டுவெடிப்பு தொடர்பில் படைவீரர் கைது
மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றிரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரு படைவீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு படைவீரர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படைவீரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது கைகலப்பில் தொடங்கி துப்பாக்கிப் பிரயோகத்தில் முடிந்துள்ளது என்று பொலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட படைவீரர் முகாமிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலீஸ் விசேடபிரிவு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குருநாகலில் உடவல்பொல பிரதேசத்தில் நேற்று வேனொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் படைவீரர் ஒருவர் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மின்னேரிய படைமுகாமில் குண்டு செயலிழக்க வைக்கும் படைப்பிரிவில் பணிபுரிபவரென பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த படைவீரர் குறித்த வானின் கீழே குண்டினைப் பொருத்தி வெடிப்பதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. குறித்த வானின் உரிமையாளர் மற்றும் இந்த படைவீரரின் மனைவிக்குமிடையில் இருந்த நெருக்கம் காரணமாகவே அவர் இவ்வாறு குண்டினை வைத்துள்ளார். மின்னேரியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர் தற்போது குருநாகலுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் அதிகாலை 1மணியளவில் குறித்த வேனில் குண்டினை பொருத்திய படைவீரர் அதிகாலை 5மணியளவில் மின்னேரியா படைமுகாமைச் சென்றடைந்தமை தெரியவந்துள்ளது. நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாடசாலை மாணவியும், சாரதியும் பலியானதுடன், 11மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக