23 அக்டோபர், 2009

மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை நேரடி தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது -அமெரிக்கா அறிவிப்பு



யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, யுத்த சூனிய வலயங்களிலும் யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்கு அருகில் இருந்தவர்களும் தெரிவித்த நேரடித் தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் பொருத்தமானதும் நம்பகமானதுமான ஓர் உத்தியை இனம் கண்டு பொறுப்புடமையை கடைப்பிடிப்பதற்கான நடைமுறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிராக சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறும் வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் அல்லது சம்பவங்களை விளக்கி அமெரிக்க ராஜாங்க திணைக்களம் காங்கிரஸ் ஒதுக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது. காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க ராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பிரதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் பற்றி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வட்டாரங்கள் பரவலாக தெரிவித்த விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அறிக்கை, எந்தவிதமான சட்ட அல்லது அர்த்தபூர்வ முடிவுக்கும் வரவில்லை. அரசாங்கம் பிரகடனம் செய்த யுத்த சூனிய வலயங்களிலும் யுத்தம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலும் இருந்தவர்கள் நேரடியாகத் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த அறிக்கையில் பெரும்பாலான சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அடங்கலாக பயங்கரவாத குழுவினர்கள் போன்ற அரசாங்கம் அல்லாத செயற்பாட்டாளர்களின் ஆயுத தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாக்க ஒரு அரசாங்கத்திற்குரிய இயல்பான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கின்றது. ஆயுத போராட்டங்களின் போது அரசாங்க மற்றும் அரசாங்கங்கள் அல்லாத செயற்பாட்டாளர்கள் சிவிலியன்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு உட்பட அவர்களது சர்வதேச சட்ட கடப்பாடுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஒரு அத்தியாவசியமான அம்சமே பொறுப்புடைமை ஆகும். இலங்கை அரசாங்கம் பொருத்தமானதும் நம்பகமானதுமான ஓர் உத்தியை இனம்கண்டு பொறுப்புடைமையை கடைப்பிடிப்பதற்கான நடைமுறையை ஆரம்பிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக