23 அக்டோபர், 2009

வவுனியா மக்கள் போக்குவரத்துச்சாலை ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்



வவுனியாவில் உள்ள தனியார் பஸ்களுக்கும் வவுனியா மக்கள் போக்குவரத்துச் சாலையைச் சேர்ந்த பஸ்களுக்கும் ஒரே சேவை வழங்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து நேற்று முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செயலக அதிகாரிகள் தனியார் பஸ்களுக்கும், மக்கள் போக்குவரத்துச் சேவை நேரத்தையே கொடுத்திருப்பதனால், இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்தத் தகராறையடுத்து, வவுனியா மக்கள் போக்குவரத்துச் சாலை ஊழியர்களின் வடமாகாண ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்கு வேறு சேவை நேரமும், மக்கள் போக்குவரத்துச் சாலையைச் சேர்ந்த பஸ்களுக்கு வேறு சேவை நேரமும் இதுகால வரையிலும் வழங்கப்பட்டிருந்ததாகவும், மக்கள் போக்குவரத்து பஸ்களின் சேவை நேரத்திலேயே தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடத்தக்கவாறு கடந்த 20 ஆம் திகதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து அமைச்சு, மக்கள் போக்குவரத்துச் சேவைக்கு வழங்கப்பட்ட நேர அட்டவணைக்கு அமைய தனியார் சேவை நேரம் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து பிரதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை நண்பகல் முதல் இடம்பெற்று வரும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தின் மக்கள் போக்குவரத்துச் சாலையின் உள்ளூர் சேவைகள் உட்பட சகல சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்களும், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக