7 அக்டோபர், 2009

07.10.2009 தாயகக்குரல் 22

அரசியல் கட்சிகளிடையே கூட்டணி அமைப்பது பற்றிய செய்திகளே இலங்கை ஊடகங்களில் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. கட்சிகளிடையே கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் பலரும் பலவித நோக்கங்களுடன் செயல்படுகின்றனர். ஆனால் கொள்கை உடன்பாடு இல்லாமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அமையும் கூட்டணிகளால் நிலைத்து நிற்கமுடியாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் அரசாங்கத்தை குறிப்பிட்ட காலத்துள் வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியின்கீழ் ஒன்றுபடுத்துவது என்று மங்கள சமரவீர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ் பேசும் மக்கள் சார்ந்த கட்சிகள் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடந்து முடிந்த சில தேர்தல்களில் போட்டியிட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இந்தக் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் மேல்மட்ட பேச்சுவார்த்தை பலமுறை நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது என்ற அடிப்படையில் ஒரு கூட்டுக்குள் கொண்டுவர ஏனைய கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி அணுகிவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேரமுடியாது என்ற போதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக ஜே.வி.பி.யும் ஐ.தே.கட்சியை ஆதரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் கட்சிகளை ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைக்கும் முயற்சிகள் சில புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இணைப்பு முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த முயற்சிகளை பின்போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.


தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியையும் வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் தமது நேசக் கட்சிகளாக கொண்டு செயல்பட்டு வந்த தமிழ் புத்திஜீவிகள் என்று கருதப்படுகின்ற சிலர் தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்பாகி புலிகளின் சார்பில் பாராளுமன்றத்துக்கு சென்றதை தொடர்ந்து தமிழ் புத்திஜீவிகள் தமிழ் தேசியத்தின் பெயரால் புலிகள் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளை மௌனத்தின்மூலம் அங்கீகரித்தனர். சிலர் பத்திரிகைகளில் புலிகளின் தவறான நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும் கட்டுரைகள் வரைந்துள்ளனர். புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த புத்திஜீவிகளும் இனப்பிரச்சினை தொடர்பாக புலிகளின் செயற்பாடுகளை கடந்த காலங்களில் ஆதரித்து வந்திருக்கலாம்.


கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் 2001ம் ஆண்டு கடைசியில் ~~பலய|| என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் ~அதிகாரப் பரவலாக்கல் மூலம் பிரச்சினையைத் தீர்த்தால் எதிர்காலத்தில் ஐக்கியப்பட்ட நாடு ஒன்று உருவாகும். அத்தகைய ஐக்கியமான தேசம் ஒன்றுக்குள் ஒற்றையாட்சி நிலவ முடியாது. இலங்கையை ஒற்றையாட்சி கொண்ட ஒரு நாடாக பேணவேண்டுமாயின் செய்யவேண்டிய ஒரே காரியம் புலிகளை யுத்தம் செய்து முற்றாக அழிப்பது மாத்திரம்தான். அதை செய்ய முடியுமா? என்று கேட்டிருந்தார்.


புலிகள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண முன்வருவார்கள் என்று இவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதத்தில் யுத்தத்தில் அவருடைய கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று தென்னிலங்கையில் பெரும்பான்மையான கட்சிகள் ஒற்றையாட்சி பற்றி பேசுகின்றன.
யுத்தம் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட நிலையில், முன்னர் புலிகளை ஏற்காததால் அரசின் ஒட்டுக் குழுக்கள் என்று விமர்சிக்கப்பட்ட தமிழ் கட்சிகளை அரசுடன் ஒட்டாதவர்கள் என்று சொல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒட்டவைத்து அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வைக்கும் முயற்சியிலேயே இந்த தமிழ் புத்திஜீவிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி ஐ.தே.கட்சி கூட்டில் இவர்களை இணைக்கும் முயற்சியின் முதல் படி என்ற விமாசனங்களும் வருகின்றன.


நடைமுறைப் பிரச்சினைகளில் ஒருமித்த குரல் கொடுக்க தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டால்; மட்டும் போதுமா. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யதார்த்தமான ஒரு பொது உடன்பாட்டுக்கு இந்தக் கட்சிகளால் வரமுடியாதா என்ற கேள்விகளும் மக்களிடம் இருந்து வர ஆரம்பித்துள்ளன.
வெளியில் உள்ள புத்திஜீவிகள் இந்த ஒட்டு வேலை முயற்சிகளில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க தமிழ் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் சுயமாக ஒருவருக்கு ஒருவர் பேசி தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது எந்த அளவுக்கு வெற்றியளிக்கும் என்பது தெரியவில்லை.


தென்னிலங்கையைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் கட்சியாகவே பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பற்றிய சந்தேகம் இன்னமும் தென்னிலங்கை மக்களிடையே காணப்படுகின்றது. அண்மையில் பத்திரிகை பேட்டி ஒன்றில், ~தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்பகுதியில் ஒரு இனவாத அமைப்பாகவே பார்க்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன| என்று கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் பத்திரிகையாளர் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில் ஒரு குறிப்பிட்ட அளவிலானோர் அவ்வாறு பார்க்கக்கூடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. போர்காலத்தில் வெளியான தகவல்களால் மக்கள் குழம்பிபோயுள்ளனர். அதுபற்றிய சரியான தெளிவை எடுத்துக் கூறியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினை தொடர்பான அவர்கள் நிலைப்பாடடில் இப்போது பெரிய வித்தியாசம் கிடையாது இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வு ஒன்றை சந்திரிகா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதன் நகலை எரித்து எதிர்ப்பை காட்டியது ஐக்கிய தேசியக் கட்சி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1995ல் இனப்பிரச்சினைக்கு தீர்வாக வைத்த அரசியல் அதிகாரப்பரவலாக்கல் யோசனையை முற்றிலும் நிராகரிக்கும் விதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சர்வகட்சி பிரதிநிதி குழுவிடம் தீர்வு யோசனைகளை முன்வைத்தது.


இந்த விதத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இரண்டு தேசியகட்சிகளும் தமிழ் தேசிய இனப்பிரச்சினையை தமது அரசியல் நலனுக்கு துரும்பு சீட்டாகவே பயன்படுத்துகின்றன.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்ற முயற்சியில் தாங்களாகவே ஈடுபடத் தொடங்கியதில் இருந்து இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் இவர்களுக்கு எந்தளவுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ன என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக