7 அக்டோபர், 2009

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மரம் வெடுபவர்கள் மீது நடவடிக்கை-எடிசன் குணத்திலக்க



மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுபவர்கள் மீதும் ,விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

சட்ட விரோதமான முறையில் மரங்கள் வெட்டுவதால் காடுகள் அழிக்கப்படுவதாகவும் ,இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்ததோடு கருத்துக்களையும் வெளியிட்டனர்.

இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையங்கள் முன்பாக உள்ள பிரதான வீதி அடுத்த சில நாட்களில் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது.இதனை பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள பிரதான நுழைவாயில்களில் தற்போது ஒரு வாயிலே பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் ,நோயளர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ஏனைய வாயில்களையும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகரை ,களுவாஞ்சிக்குடி ,போரதீவு ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத மது உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து வருவதால் அவற்றிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்றும் இக்கூட்டத்தில் மற்றுமொரு தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக