11 ஜூன், 2011

அரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - இந்திய தூதுக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை




இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியினூடாக கலந்துரையாடியபோதே இந்த ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இன்று சந்திக்க ஏற்பாடு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்ட தூதுக்குழு நேற்று நண்பகல் இலங்கை வந்ததடைந்தது.

இந்நிலையில் இந்திய உயர்மட்ட குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்,

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வசதிகள் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததாக தெரியவருகின்றது.

இலங்கை வரும் வழியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சு நடத்திவிட்டே வந்திருந்தார்.

மேலும் சிவ் சங்கர் மேனன் இந்தியா திரும்பும் வழியில் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை சந்தித்து இலங்கை விஜயம் குறித்தும் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடிவிட்டே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய தரப்புக்கும் இடையில் இது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதும் இருதரப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் குறிப்பிட்டன.

இதேவேளை தமிழக தீர்மானம் தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்திய மாநில அரசுகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசுடனேயே தொடர்புகளை பேணுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வரும் இந்திய உயர்மட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், அவசரகால சட்டத்தை அகற்றுதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கபாடு காணப்பட்டிருந்தது.

இதேவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த ராதிகா சிற்சபேசனின் தமிழ்க் குரல்


கனேடிய பாராளுமன்றத்துக்கு முதல் முறையாக தெரிவான தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தமிழ்மொழியில் உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில்,

"கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன்.

தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடா எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம்.

இன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.

கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இது. தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும் அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

10 ஜூன், 2011

இந்திய உயர்மட்ட குழு சற்றுமுன் இலங்கை வருகை

இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியாவின் உயர் மட்டக் குழுவொன்று சற்றுமுன் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இக்குழு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் கே. நாயர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை தாரைவார்க்க இரகசிய ஒப்பந்தம்: ரில்வின்

இந்த அரசு இரட்டைவேடம் பூண்டு ஆட்சி நடத்துவதுடன் இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை தாரைவார்க்க இரகசிய ஒப்பந்தம் செய்வதாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறிக்கொண்டே தேசப்பற்று அற்ற விதத்தில் இந்த அரசு செயற்படுகின்றது.

கண்டி அஞ்சல்கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அரசு வெளிநாடுகளில் ஒன்றையும் உள் நாட்டில் வேறொன்றையும் கூறுகிறது.

பான்கீமுன் அல்லது அவர்களது பிரதிநிதிகளை இலங்கைக்கு வர விசா வழங்கமாட்டோம் என்று கூறியபோதும் ஐ.நா. சபைக்கான இலங்கைப் பிரதிநிதி பான்கீமூனை அழைத்து பகற்போசன உணவு வழங்கி பேச்சுவார்த்ததையில் ஈடுபடுகின்றார்.

இலங்கையில் வடபகுதிக்கான புகையிரதப்பாதை உட்;பட தென்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து விட்டு கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பிரதேசத்தை அவர்களுக்கு தாரை வார்த்துள்ளது.

தம்மை தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறும் அரசு உண்மையான தேசப் பற்றாளர்கள் அல்லவென்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே முகாம்களில் உள்ளனர்: அரசாங்கம்




யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான தற்காலத்தில் 839 புலி உறுப்பினர்கள் மூன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்று சபையில் அறிவித்த அரசாங்கம் இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தது.

இதேவேளை, மூன்று முகாம்களை மாத்திரமே குறிப்பிட்டு 839 புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கம் கூறுமானால் திருகோணமலை, வெலிகந்தை ஆகிய முகாம்கள் தடுப்பு முகாம்கள் இல்லையா? 839 பேர் தான் எஞ்சியுள்ளனர் எனில் ஏனையோர் எங்கே? அரசாங்கம் இதனைப் பொறுப்புடன்தான் வெளிப்படுத்துகின்றதா என்று ஜே.வி.பி. கேள்வியெழுப்பியது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை குற்றப் பத்திரிகை தாக்கல், தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த முகாம்கள் என்றே கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன,

பூசா, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய மூன்று தடுப்பு முகாம்களில் 839 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அனுரகுமார

இதன்போது இடைக்கேள்வியொன்றைத் தொடுத்த அனுரகுமார எம்.பி.,

கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் என்று கூறியது. பின்னர் 12,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் 8000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது. ஆனாலும் இன்று இந்த சபையில் 839 பேரே மூன்று தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றது.

அவ்வாறெனில் வெலிக்கந்தை திருகோணமலையில் அமைந்திருப்பவை தடுப்பு முகாம்கள் இல்லையா? எனக் கேட்கிறேன். இங்கு நான் தடுப்பு முகாம்கள் குறித்தே கேள்வியெழுப்பியிருக்கிறேன் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் அரச தரப்பு பக்கத்திற்கு வந்தனர். இவர்களை நாம் முகாம்களில் வைத்தே பராமரித்தோம் என்றார்.

அனுரகுமார

இதனையடுத்து குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பிலேயே இங்கு கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் கூறுவது போல் 839 பேரே மேற்படி முகாம்களில் உள்ளனர் என்றால் இதுவரை காலமும் கூறி வந்த ஏனைய எண்ணிக்கையிலானோர் எங்கே? அரசாங்கம் கூறுவதில் எது உண்மை எனக் கேட்டார்.

தினேஷ் குணவர்தன

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே இங்கு நான் பதிலளித்துள்ளேன். இது முற்றிலும் உண்மையானதாகும்.

கடந்த காலங்களில் இந்நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள்தான் இன்று புலி உறுப்பினர்களுக்காக கேள்வி எழுப்புகின்றனர்.

புலிகளாக இனங்காணப்பட்டவர்களை தடுப்பு முகாம்களிலேயே வைத்திருப்பதற்கு எண்ணம் இல்லை. அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டு அவர்கள் தொழில் புரிகின்றனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதன்போது மேலுமொரு இடைக் கேள்வியைத் தொடுத்த அனுரகுமார எம்.பி.,

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு மொழிப் பிரச்சினை இருக்கின்றது. அவர்களுக்கு தமிழ் மொழியில் மாத்திரமே பரீச்சயம் இருக்கின்றது. இந்நிலையில் குறித்த புலி உறுப்பினர்கள் விசாரணைக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளின்போது சிங்கள மொழியே பெரிதும் பாவனையில் உள்ளது. அண்மையில் பொரளை சிறையில் தமிழ் இளைஞர் ஒருவரை சந்தித்தேன்.

அவரது பிரச்சினை என்னவெனில், அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவருக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அது குறித்து குறித்த அந்த தமிழ் இளைஞர் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. தான் விடுதலை செய்யப்பட்டதாகவே உணர்ந்த அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே தனக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனவே இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைப்பதை நோக்காகக் கொண்டு இவ்வாறானவர்களை விசாரணைக்குட்படுத்தும்போது நீதித்துறையில் தமிழ் மொழி மூலம் விசாரணைக்குட்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்படுத்த முடியுமா எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தீர்ப்பளிக்கப்படுகின்றவர் சார்பில் தெளிவுபடுத்தல்களை கோர முடியும். அத்துடன் அவரது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பர். இது நீதித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே அனுரகுமார எம்.பி. கூறுவதனை ஏற்க முடியாது என்றார்.

இதேவேளை, குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தொடர்பில் அரசு கூறுவதில் நம்பிக்கையில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாயை பிடித்து விழுங்கும் கடல் வாழ் உயிரினம்





நாயை பிடித்து விழுங்கும் கடல் வாழ் உயிரினம் இதை பார்த்தாவது பத்தான இடங்களில் உங்கள் குழந்தைகளை இறக்கி விட்டு புகை படம் எடுக்க முனையாதிர்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் பதிவு அவசியமற்றது: கெஹெலிய

வடக்கின் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் எனக்கு எந்தத் தவலும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போதைய நிலைமையில் அவ்வாறான பதிவு அவசியமற்றது என்றே நான் கருதுகின்றேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் பொலிஸ் பதிவை மேற்கொள்ளவேண்டும் என கிராம சேவகர்கள் ஊடாக அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும் ஏன் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஊடகவியலாளர்கள் வினவினர்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் வடக்கின் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் தற்போதைய நிலைமையில் இது அவசியமற்ற ஒன்று என்றே நான் கருதுகின்றேன். எனினும் இது தொடர்பில் நான் ஆராய்ந்துபார்த்துவிட்டு உங்களுக்கு கூறுகின்றேன். இந்த விடயம் குறித்த தகவல்களை நான் பெறவேண்டியுள்ளது. பெற்றதும் அறிவிக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவிற்கு கயிறு கொடுத்தது யார் : தினேஷ்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட்டிருக்கலாம் எனினும் சூழ்ச்சி செய்தனர். இதில் சரத் பொன்சேகாவிற்கு கயிறு கொடுத்தது யார் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது யுத்தத்திற்கு பின்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் எண்ணிக்கை, தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டிருந்தார்.

கேள்விக்கு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்தன பதிலளித்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே குறுக்கிட்ட ஐ.தே.க.எம்.பி யான ரவி கருணாநாயக்க, அப்படியாயின் சரத் பொன்சேகாவை எப்போது விடுவிப்பீர்கள் என வினவினார்.

அவர் தனது கடமைகளை செய்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் சூழ்ச்சியின் மூலம் அவருக்கு கயிறு கொடுத்தது யார் என அமைச்சர் தினேஷ் வினவினார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் தடையை நீக்கக் கோரும் வழக்கு ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஏற்பு




ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று புலிகள் சார்பாக விக்ரர் கொப்பே என்ற சட்டத்தரணி தாக்கல் செய்துள்ள வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அந்த நீதிமன்றின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை என்றும் எதுவித வன்முறையும் அற்ற விதத்தில் தமது உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்கள் என்றும் விக்ரர் கொப்பே வாதாடுகிறார்.

இதனை ஏற்று வழக்கை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றம் இணங்கியுள்ளது. இது ஒரு மைல் கல்லாக நோக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் ஆனது நீதிமன்று, பொது நீதிமன்று மற்றும் உரிமையியல் சேவை நீதிமன்று என்ற மூன்று நீதிமன்றங்களை உள்ளடக்கியது.

ஒவ்வொரு நீதிமன்றுக்கும் ஒரு நீதிபதியும் சட்டத்தரணியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு சமர்ப்பிக்கப்படும் வழக்குகள் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் இரு நிலைகளில் விசாரிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நீதிமன்றமே ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையிலான சட்ட முறுகல்களைத் தீர்த்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...