30 ஜூன், 2011

பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: ஹக்கீம்

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத குடியேற்றங்களையும் காஸா மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் சர்வதேச நீதிகளையும் ஐ.நா. மாநாட்டு தீர்மானங்களை மீறிச் செயல்படுவதையும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் பல உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வன்மையாக கண்டித்து கருத்து வெளியிட்டதை தாம் கவலையோடு செவி மடுத்ததாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டுமெனவும் பிரஸ்தாப அமைப்பின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் மூன்றாம் நாள் அமர்வு கொழும்பு கிராண்ட் லேக்சைட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றபோது பலஸ்தீனர்களை வெளியேற்றுதலும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் யூதக் குடியேற்றங்களை மேற்கொள்ளுதலும் என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வை முடித்து வைத்து உரையாற்றும்போதே நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

காஸா பிரதேசத்தில் சர்வதேச நீதி, நியாயங்களை மீறி பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் விதித்துள்ள தடை காரணமாக அப்பாவி பலஸ்தீன பொது மக்கள் உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருட்கள் போன்றவை கிடைக்கப் பெறாது பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளதாகவும் பலஸ்தீன நீதியமைச்சர் சுட்டிக் காட்டியதை போன்று பலஸ்தீனத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் 45 வீதமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து ஜப்பான், ஈரான், கட்டார், எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர்கள் இந்த செயலமர்வின்போது உரையாற்றினர்.

பலஸ்தீனம் சுதந்திரமான தன்னாதிக்கமுடைய நாடாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும், அதன் தலைநகராக ஜெருசலம் விளங்க வேண்டுமெனவும் முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் 1967 ஆம் ஆண்டுக்கு முந்திய எல்லைகளுக்கு இஸ்ரேல் பின்வாங்க வேண்டுமெனவும் காஸா மக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் முற்றாக அகற்றப்பட வேண்டுமெனவும் அவர்கள் தமது உரைகளின் போது வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக