22 ஜூன், 2011

யுத்தத்தில் எவரும் கொல்லப்படவில்லை என்பதை யாரும் நம்பமாட்டார்கள்: கிரியல்ல



இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்களில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என அரசு கூறுகின்றது. இதனை யாரும் நம்பமாட்டார்கள், இதனை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூற வேண்டும் என்று ஐ.தே.க. எம். பியான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒதுக்கீடு சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகின்ற போதிலும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் அரசு மிகவும் இரகசியமான முறையில் பதிலளித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் சனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்க அரசு இதுவரையில் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவை தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்யவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சனல் 4இல் வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அப்போது கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் அவப் பெயர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இது தொடர்பாக ஊடகங்களுடனோ நாட்டு மக்களுடனோ அல்லது பாராளுமன்றத்திலோ பேசுவதில் எந்த பயனும் இல்லை சர்வதேசத்துடன் தான் பேச வேண்டும்.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை பொய்யென நிரூபிப்பது அரசின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் இது தொடர்பில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பில் உடனடியாக சர்வதேசத்துடன் பேச வேண்டும்.

ஐ. நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக