22 ஜூன், 2011

2020 க்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுவிடும்: தினேஷ்

வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக இதுவரையில் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எதிர்வரும 2020 ஆம் ஆண்டுக்குள் மேற்படி மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள சகல கண்ணிவெடிகள் மற்றும் மிதி வெடிகளும் அகற்றப்பட்டு விடும் என்று அரசாங்கம் நேற்று சபையில் அறிவித்தது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப. ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கையின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார் .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்புக்கள், எஞ்சியுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எடுக்கும் காலப்பகுதி ஆகியவை தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி.கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் பதிலளிக்கையில், சுவிற்சர்லாந்து, டென்மார்க், பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் படி 258.51 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு சுவிற்சர்லாந்துக்கும் 1336.29 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு டென்மார்க்கிற்கும் 650.59 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கு 1273.90 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2002 முதல் இன்று வரையில் மேற்படி நான்கு நாடுகளும் நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தரப்பினாலும் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கென இதுவரையில் 149 கோடியே 28 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, சீனா,அவுஸ்திரேலியா, யு.என்.எச்.சி.ஆர். ஐ.ஓ.எம். மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவை கண்ணிவெடிகள் மிதிவெடிகளை அகற்றுவதற்கான உபகரணங்களை வழங்கியுள்ள அதேவேளை யுனிசெப் மற்றும் அமெரிக்கா ஆகியன 65 வாகனங்களையும் வழங்கியுள்ளன.

மேற்படி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் வடக்கு கிழக்கில் கண்ணிவெடி, மிதிவெடிகளை அகற்றுவதற்காக அதிகமான நன்கொடைகளையும் வழங்கியுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் முற்றாக அகற்றப்பட்டுவிடும். இந்த இலக்கினை கொண்டே அரசு செயற்பட்டுவருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த இலக்கினை எட்டுவதற்கு அரசு எதிர்பார்க்கிறது. கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்றது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக