22 ஜூன், 2011

இராணுவ பதிவுக்கு எதிராக கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த மனு வாபஸ்

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது என யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்ததையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் யாழ்.கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அவர் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே குறித்த மனுவை வாபஸ் பெற தீர்மானித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்திடம் அறிவித்தனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான என்.ஜே.அமரதுங்க, பி.ஏ.ரத்னாயக மற்றும் சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் கடந்த மார்ச் 3ஆம் திகதி விசாரிக்கப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ பேச்சாளர் உபய மெதவல மற்றும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவர்கள் சார்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

பலாத்காரமான முறையில் பொதுமக்கள் பதிவு நடவடிக்கை இடம்பெறுவதுடன் புகைப்படம் பிடிக்கப்படுவதாகவும் இதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் சிங்கள மொழியில் அச்சடிக்கப்பட்ட பத்திரத்தில் பலவந்தமாக கைச்சாத்திட வைக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக