22 ஜூன், 2011

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29ஆவது இடம்

மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 29ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் பொரின் பொலிஸி (வெளிவிவகாரக் கொள்கை) எனும் சஞ்சிகையினால் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும் சூடான் 3ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கையின் அயல் நாடுகளில் பாகிஸ்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 12ஆவது இடத்தில் உள்ளது. மியன்மார் 18ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 25ஆவது இடத்திலும் நேபாளம் 27ஆவது இடத்திலும் உள்ளன.

60 நாடுகளைக் கொண்ட இப்பட்டியலில் பூட்டான் 50 ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் உள்ள நாடுகளில் பெரும்பாலானவை ஆபிரிக்க நாடுகளாகும்.

இலங்கை தொடர்பான குறிப்பில் 2010 ஆண்டின் சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையின் படி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கை பொதுமக்கள் மீது எறிகணைகள் வீசுவதிலும் ஏனைய அக்கிரமங்களிலும் தங்கியிருந்தது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் கடைசியாக வெளியான புள்ளிவிபரங்களின் படி 327,000 பேரில் சிலர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க பிளவுகள் இன்னும் நிலவுகின்ற போதிலும் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் கடந்த காலத்தை மறக்க ஆர்வம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக