20 ஜூன், 2011

அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை ஜனாதிபதி நிராகரிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக 30 மில்லியன் நஷ்டஈடு கோரி அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் மூன்று வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு வாஷிங்டன் டிசி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்த அழைப்பாணை ஜனாதிபதியின் வதிவிடமான அலரிமாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதையடுத்து நீதி அமைச்சு அதைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அதேவேளை இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த நீதிமன்ற நடவடிக்கையானது ஜனாதிபதிக்கும் அரசுக்கும் தொல்லை கொடுக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டதொன்று என இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி, அரச தலைமைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமெரிக்காவுக்கு செல்ல விடாமல் தடுக்க முனைவது பயனற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நியூயோர்க் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டத்துக்கு புறம்பான, படுகொலைச் சம்பவங்கள் குறித்தே அமெரிக்க நீதிமன்றம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சித்திரவதைக்குள்ளானவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக இந்த மனுவை தாக்கல் செய்தவர்களின் சார்பிலான சட்டத்தரணியான புரூஸ் ஃபைன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டம் என்று ஒன்று இருக்கிறது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அவரிடம் நட்டஈடு கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும். இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் கீழ் ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்று புரூஸ் ஃபைன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட டாக்டர் மனோகரனின் மகனுக்காகவும் அக்சன் பெஃய்ம் ஊழியர் ஒருவரின் உறவினர்களாலும் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்கள் சிலருக்காகவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹெய்க் மனித உரிமை சர்வதேச ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி இந்த அழைப்பாணைக்கு பதிலளிக்காவிட்டால் அவருக்கு எதிராக தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கும் என்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டுக்கு உத்தரவிடப்பட்டால் அவருக்கு அமெரிக்காவிலோ அல்லது இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளிலோ இருக்கக்கூடிய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடியும் என்றும் அத்துடன் அங்கு போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகவும் மாறும் என்றும் புரூஸ் ஃபைன் கூறியதாக பி.பி.ஸி. செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக