8 ஜூன், 2011

ஓய்வூதிய சட்டமூலம் வாபஸ் பெறப்படவில்லை: அநுரகுமார

ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்டமூலத்தை (தனியார் ஓய்வூதிய சட்டமூலம்) வாபஸ் பெறுவதாக அரசாங்கம் அறிவித்தபோதிலும் அந்த சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து இன்னும் அகற்றப்படவில்லை என்று அநுரகுமார திஸாநாயக்க எம். பி. சபையிஸ் நேற்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா ஒழுங்குப் பத்திரத்தில் விடயதானங்களை இணைப்பதற்கும் அதிலிருந்து நீக்குவதற்கும் சம்பிரதாயம் இருக்கின்றது அதன் பிரகாரம் வாபஸ் பெறப்படும் என்று பதிலளித்தார்.

பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த அநுரகுமார திஸாநாயக்க எம். பி. பாராளுமன்றத்தின் இன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் 14 ஆவது பிரேரணையாக ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மதிப்பீடு உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டதாக அரசாங்கத்தினால் கூறப்பட்டது. இதற்கான தீர்மானங்கள் அமைச்சரவையினால் மட்டுமன்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவிலும் எட்டப்பட்டதாக அமைச்சர்களால் பல தடவைகள் கூறப்பட்டது.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இன்றைய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்படவில்லை. அப்படியாயின் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்துகொள்ள வேண்டும் என்று சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சபாநாயகர், இதுபற்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடமுடியும் என்று சுட்டிக்காட்டினார். மீண்டும் குறுக்கிட்ட அநுரகுமார எம். பி. இது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கேட்கப்பட வேண்டிய விடயம் இல்லை.

சம்பிரதாயத்தின் பிரகாரம் சட்ட மூலமொன்றை வாபஸ் பெறுவதென்றால் அதனை சபையில் தான் செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டிய போது இதற்கான நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுக்கப்படும் என்று சபாநாயகர் பதிலளித்தார். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம். பி.யுமான ஜோன் அமரதுங்க இந்த சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கான அமைச்சரவை தீர்மானம் எட்டப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறான சர்ச்சைக்கு மத்தியில் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா இந்த சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துவிட்டது. எனினும் அதற்கான சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது. அதன் பிரகாரம் தான் செய்ய வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே கலந்துரையாடப்பட்டு சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த சம்பிரதாயம் தெரியாமல் போனது பற்றி நாம் கவலைப்படுகின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக