14 பிப்ரவரி, 2011

எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை: கருஜயசூரிய

இந்நாட்டில் அண்மை காலமாக கொலை செய்யப்பட்ட அல்லது தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பாக இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு எதுவித உத்தரவாதமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரவித்த அவர்,

இந் நாட்டில் அண்மை காலமாக 12 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும் 31 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். இவை எதற்கும் இதுவரை சரியான விசாரணை நடத்தவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை கண்டு பிடிக்கப்படவில்லை.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெரும்;. அனைத்து சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கிராம அரசு ஒன்று உருவாக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமாக 5100 வேட்பாளர்;களை இம் முறை நிறுத்திவுள்ளோம்.

தற்போதைய ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்கள் நாளுக்கு நாள் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திரும்புகின்றனர். எமக்கு கிடைக்கும் இரகசிய அறிக்கைகள் இதனை தெளிவாக்கியுள்ளன. நாட்டின் அநியாயங்கள் கூடி விட்டன. வெள்ளை வான் கலாசாரம் ஒன்று உருவாகிவுள்ளது.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் வெள்ளை வான்கள் பின் தொடர்கின்றன. நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த சரத் பொன்சேக்கா சிறையில் வைத்துத் துன்புறுத்தப்படுகின்றார். நீதிமன்றம் விடுத்துள்ள தீர்ப்பின் படி அவருக்கு அளிக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகள் கூட அளிக்கப்படவில்லை.

எகிப்திலும் இடம் பெற்றது இவ்வாறான ஒன்றாகும். ஹோஸ்னி முபாரக்கும் தனது பிரதிவாதியை சிறையில் அடைத்தார். ஆனால் மக்கள் ஒன்று திரண்டு இன்று அவரை பதவியை துறக்கச் செய்துள்ளனர். இலங்கையிலும் இவ்வாறான நிலை உருவாகாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக