14 பிப்ரவரி, 2011

இலங்கைக்கு எதிரான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டில் இந்தியாவும் தமிழ்க் கூட்டமைப்பும்

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் சாட்சியங்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச உதவிகள் இடைநிறுத்தப்படலாம் என்று தேச ப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைக்கு முகம் கொடுக்க ஜெனிவா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் எமது தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாட்டை துண்டாடும் அந்நிய சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில்,

மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கையை துண்டாடும் முயற்சியில் ஈடுபடுகின்றது. தற்போது இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தச் செயற்பாடுகளின் பின்னணியில் இந்தியாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவை மாநாட்டின் போது இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்துவதே இவர்களின் நோக்கமாகும்.

இதற்கு அமைவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெற்கின் அரசியல்வாதிகளையும் மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து தனி நாட்டிற்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்கு மெருகூட்டும் வகையில் இந்தியா மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் காய்நகர்த்தல்களை முன்னெடுக்கின்றது.

எனவே இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் ஜெனிவாவில் முன்னெடுக்க உள்ள நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக