12 பிப்ரவரி, 2011

போதியளவு அரிசி கையிருப்பில்; இறக்குமதிக்கு அவசியமில்லை பதுக்கல்காரர் மீது அதிரடி நடவடிக்கை அரிசி தட்டுப்பாட்டுக்கு இடமே இல்லை




நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கும் வகையில் கையிருப்பு உள்ளதாகவும் அதனால், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாதென்றும் கமநல சேவைகள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கையிருப்பில் தற்போது ஒரு இலட்சத்து 82 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் உள்ளதாகவும் இதில் 25 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி உடனடியாக சந்தைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தவிரவும் தனியார் துறையினரிடமும் கூடுதலான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் இதனால், எந்த வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2010-2011 பெரும்போகத்தில் 14 கோடியே 30 இலட்சம் புசல் நெல் அறுவடையை எதிர்பார்த்திருந்ததாகக் கூறிய அமைச்சர் அண்மைய வெள்ளப் பெருக்கின் காரணமாக 12 கோடி புசல் மட்டுமே அறுவடைசெய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் 2 கோடியே 30 இலட்சம் புசல் சேதமடைந்ததால் 1322 கோடி நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேன, நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 655 விவசாயிகளின் நெல் விளைச்சல் சேதமடைந்ததாகவும் கூறினார். 2010-2011 பெரும்போகத்தில் 18 இலட்சத்து 29 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக