ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடங்கலான முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு ஐ.தே. க தலைவருக்கும் கட்சிச் செயலாளருக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சிச் செயலாளர் ஹசன் அலி எம்.பி., பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அடங்கலான ஏழு எம்.பிகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று கொழும்பு மாவட்ட நீதவான் ரஞ்சித் என். வதுபொல முன்னிலையில் நடைபெற்றது. இந்த மனுக்களில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
ஐ.தே.க எம்.பி க்களான மனுதாரர்கள் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சி ஒழுங்கை மீறியதாகக் கூறி ஐ.தே.க செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவ தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தாம் ஐ.தே.க. அங்கத்தவர்கள் அல்ல எனவும் தேர்தலுக்காக மட்டுமே ஐ.தே.க. வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைந்ததாகவும் குறிப்பிட்டிருந்த மனுதாரர் முஸ்லிம் காங்கிரஸினால் மட்டுமே தங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமென மனுதாரர் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மனுதாரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு 24 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக