13 ஜனவரி, 2011

நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரிப்பு






நாமல் ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு கடந்த மாதம் இலங்கை சட்டக் கல்லூரியில் நடந்த தேர்வின் போது விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கோரி முன்வைக்கப்பட்ட ஒரு புகார் மீதான விசாரணை கொழும்பில் துவங்கியது.

இந்தப் புகாரை விசாரிக்க கொழும்பு சட்டக் கல்லூரியால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி உதித இகலஹேவ தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஒன்றரை மணி நேரம் விசாரணையை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணையின் போது புகார்தாரர் டி எம் துஷார ஜெயரத்ன விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகி, இந்த விசாரணை தொடர்பாக தனது ஆட்சேபணையை முன்வைத்தார். தற்போது கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்று அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.

சட்டக் கல்லூரியின் வினாத் தாள்கள் சட்டவிரோதமாக வெளியானது என்றும், ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ குளிருட்டப்பட்ட அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் புகார் அளித்திருந்தார்.

இந்த இரு புகார்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் புகார் செய்ததன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜெயரத்ன கூறிய குற்றச்சாட்டை காவல் துறையினரிடம் முறையிடுமாறு ஆணையம் அறிவுறுத்தியது.

இந்தப் புகார் குறித்தும் விசாரணை நடைமுறைகள் குறித்தும் மறுதரப்புக் கருத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக