13 ஜனவரி, 2011

விடுதலைப் புலி ஆதரவாளர்கள்" கைது




சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பத்து இலங்கை தமிழர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


புலிகள் ஆதரவு போராட்டங்கள்
கைது செய்யப்பட்டுள்ள பத்து ஆண்களும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுவதாக சுவிஸ் நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் மற்றும் குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் என்கிற குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இருபது இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டதாக சுவிஸ் நாட்டின் மத்திய குற்றவியல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைதுகளுக்கான புலனாய்வு நடவடிக்கைகள் 18 மாதங்களுக்கு முன்னர் தொடங்கின என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கைது செய்யப்பட்டிருப்பவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மற்ற தமிழர்களை விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர் என்று நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், அங்குள்ள தமது நாட்டைச் சேர்ந்த தமிழர்களை பெருந்தொகையான பணத்தை கடனாகப் பெற்று தம்மிடம் கையளிக்கும்படி மிரட்டியும், அச்சுறுத்தியும் பணிய வைத்தனர் என்று அரச தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பல ஆண்டுகள் இடம் பெற்றன என்றும், அது அவர்களுக்கு பல மில்லியன் டாலர்களை ஈட்டிக் கொடுத்தது என்றும் அரச வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சுவிஸ் நாட்டில் சுமார் 40,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து சாட்சியம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு தொலைபேசி வசதியையும் சுவிஸ் நாட்டு அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக