17 நவம்பர், 2011

2 மணி நேரத்தில் அடையாள அட்டை ஜனவரி முதல் புதிய நடைமுறை இரட்டைப் பிரஜகீவுரிமை உள்ளோருக்கும் வசதி தாயகம் திரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்







'ஒரே நாள்' சேவையின் கீழ் இரண்டு மணி நேரத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.

தினமும் சுமார் 1000 பேர் ஒரே நாள் சேவையின் கீழ் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்துக்கு வருகை தருகின்றனர். திணைக்களத்தின் ஏனைய கருமங்களுடன் ஒரே நாள் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காலதாமதம் ஏற்படுவதுடன் விண்ணப்பதாரிகளும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.

இதன் காரணமாக திணைக்கள பிரதேச கட்டடத்துடன் கூடிய புதிய கட்டடத்தினுள் ஒரே நாள் சேவை மையம் அமையவுள்ளது.

விண்ணப்பதாரிகளின் படிவங்களை பெற்றுக்கொள்வது முதல் அடையாள அட்டையை வழங்குவது வரை இலத்திரனியல் முறையில் இலக்கங்கள் வழங்கப்படும். திரையில் தமக்குரிய இலக்கம் தெரிந்தவுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம். அதேபோன்று புதிய அடையாள அட்டை 2 மணி நேரத்துள் தயாரானவுடன் விண்ணப்பதாரிக்குரிய இலக்கம் திரையில் தெரிவிக்கப்படும்.

உரிய விண்ணப்பதாரி கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. தினமும் பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.

கொழும்பு - 05 கெப்பிட்டிபொல மாவத்தையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்ற போதே ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் தாம் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றிருந்தால் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் பி. விஜேவீர தெரிவித்தார்.

அத்துடன் தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் தமிழர்களும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள எமது இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றிருக்காவிடின் அதற்காக விண்ணப்பித்த பின்னர் பிரஜாவுரிமை கிடைத்த தினத்திலிருந்து அவர் தேசிய அடையாள அட்டையை பெற தகுதியுடையவராக கருதப்படுவார். இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட ஒருவர் ஆட்பதிவு திணைக்களத்தின் 009411583122, 009411585043 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 0094 11 593634, 009411583190 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலமோ அல்லது (info@rpd.gov.lk) என்ற ஈமெயில் ஊடாகவோ தொடர்புகொண்டு அறிய முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.

இதேபோன்று தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் தாங்கள் நாடு திரும்பியதற்கான கப்பல் மூலம் அல்லது விமானம் மூலம் ஆவணத்துடன் தாங்கள் வதியவிருக்கும் பகுதி பிரதேச செயலாளரூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக