18 ஜூன், 2011

வவுனியாவில் நலன்புரி, அகதி முகாம்களை மூட நடவடிக்கை

வவுனியாவிலுள்ள அகதிமுகாம்கள், நலன்புரி நிலையங்கள் அனைத்தும் விரைவில் மூடப்படவுள்ளதால் இந்த முகாம்களில் வசித்து வரும் குடும்பங்கள் அவர்களுடைய சொந்த விடயங்களில்லாத வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதற்கான சகல ஒழுங்குகளையும் துரிதமாக மேற்கொண்டுவரும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கோப்பாவில் என்னும் இடத்தைத் தெரிவு செய்து 600 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தம் காரணமாக சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து அடிப்படை வசதியின்றி முகாம்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களை மீள்குடியமர்த்துமாறு அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றது. இரு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முகாம்களில் மக்களை வைத்திருப்பது சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றது.

வன்னிப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததினால் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை வேறு ஓர் இடத்தைத் தெரிவு செய்து அவர்களை அங்கு மீள்குடியமர்த்த அரசாங்கம் முன்வந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கோப்பாவில் என்னும் காட்டுப்பகுதியைத் தெரிவு செய்த அரசாங்கம் 600 ஏக்கரை இதற்கென ஒதுக்கியுள்ளது. தற்பொழுது இப்பிரதேசம் வேகமாக துப்புரவு செய்யப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக