18 ஜூன், 2011

தேர்தல் வன்முறையை காட்டிலும் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையே அரங்கேறியது: மாவை

தேர்தல் வன்முறையைக் காட்டிலும் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையே அளவெட்டியில் நடந்த சம்பவமாகும்.

இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் ஜனாதிபதி, தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சுமத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். சிறிதரன், ஈ. சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.

அங்கு மாவை சேனாதிராஜா எம்.பி. மேலும் தெரிவிக்கையில் உள்ளூராட்சி தேர்தலின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை இராணுவத்தினர் குழப்புவதற்கு திட்டமிட்ட முறையில் செயற்பட்டு இந்த அடாவடியைச் செய்துள்ளனர். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்துவோம். ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளோம்.

இந்த செயலுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேர்தலுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்.

இந்த சம்பவத்தின் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை அடக்கியாள்வதற்கு இராணுவம் முயல்வது தெளிவாகியுள்ளது. இதனை கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதற்கான சரியான பதிலை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிடின் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்கள் சேர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்தாலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வோம்.

அன்றைய கூட்டத்தின் போது மேடையில் வந்து தர்க்கித்த மற்றும் பொல்லுகள் இரும்பு கம்பிகள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தலைமை தாங்கிய இராணுவத்தினரை நாம் அடையாளம் காட்டுவோம்.

இராணுவக் கட்டளைத் தளபதியுடன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் கதைத்தபோது அவருக்கு அடுத்த நிலையிலுள்ள மேஜர் பல்கம பொலிஸ் நிலையத்திற்கு வந்து பல முறை மன்னிப்புக் கேட்டதுடன் முறைப்பாடு செய்யவேண்டாம் என பல முறை கேட்ட வண்ணம் இருந்தார். இதன் மூலம் இராணுவம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த இக்கூட்டத்தில் இராணுவத்தினர் அடாவடித்தனமாக மக்களையும் அடித்துக் காயப்படுத்தி துன்புறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை கைகாட்டி அச்சுறுத்தியதை மறைக்கமுடியாது. இது இராணுவ அடக்குமுறையின் அதி உச்சக் கட்டமாகும்.

மிலேச்சத்தனமான தாக்குதலால் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை. கூட்டம் கூட்டினால் தடுக்கிறார்கள். ஆனால் நாம் மக்களின் வீட்டுக்கு வீடு கிராமத்திற்குக் கிராமம் சென்று எமது நிலைமைகள் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் எமக்குக் கிடைத்த ஆதரவை அரசாங்கம் அறிந்ததனால் நடக்கவுள்ள தேர்தலில் அவ்வாறு கிடைத்துவிடும் என்பதற்காக இந்த அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்றார்.

வடக்கு கிழக்கில் தேவைக்கு அதிகமாக உள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழல் மற்றும் தமிழ் மக்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் ஏனைய எம். பி. க்களும் கருத்து தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக