11 மே, 2011

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடு

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இது அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம். பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அன்று ஜே. ஆர். ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறி முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறினார்.

கொழும்பில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம். பி இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

ஐ நா அமைப்பு உலக நாடுகளில் யுத்தத்தை ஏற்படுத்தும் அமைப்பென்றும் அதனை கலைத்து பௌத்த நாடுகள் இணைந்த அமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

ஆனால் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் ஐ.நா. எமது அமைப்பென்றும் செயலாளர் நாயகம் நம்மவர் என்றும் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான முரண்பாடான கருத்துக்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களால் வெளியிட முடியாது. அது அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும். ஜே. ஆர். ஆட்சிக்காலத்தில் இது போன்ற அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறி பகுதி பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்ட அன்றைய அமைச்சர் சிரில் மத்தியூவின் பதவி பறிக்கப்பட்டது.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றங்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் போராட்டங்கள் இவை எதற்கும் அரசாங்கம் தீர்வை வழங்காது பான் கீன் மூனையும் தருஸ்மனையும் விமர்சித்து மக்களை ஏமாற்றுகின்றது. ஜனாதிபதியும் இவ்வாறான பிரசாரத்தையே முன்னெடுக்கின்றார்.

தனியார் துறையினருக்கு பாதகமான ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனையும் ஐ. நா. அறிக்கையை பயன்படுத்தி மூடி மறைக்கின்றது. அத்தோடு ஐ. நா அறிக்கை தொடர்பாக செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டாரென வெளிநாட்டமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானால் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை வெளியிட வேண்டும். இவ்வாறான சர்வதேச பிரச்சினையை ஆவேசப்படுத்தி உணர்ச்சி வசப்பட்டு மக்களை ஏமாற்றி தீர்க்க முடியாது.

இன்று அரசாங்கத்திடம் ராஜதந்திரம் கிடையாது. அறிக்கை தொடர்பாக ஐ. நா வுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன எம். பி இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்காது தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் மறுக்கப்பட்டதனாலேயே ஐ.நா அறிக்கை வெளியாகும் நிலைமை தோன்றியதற்கு காரணமாகுமென்று இங்கு உரையாற்றிய டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன எம். பி. தெரிவித்தார்.

சரத்பொன்சேகா மீது யுத்தக்குற்றச்சாட்டை சுமத்தவே அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன எம்.பி :

தமிழ் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் சட்ட விசாரணைகளை நடத்தி குற்ற மற்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். யுத்தத்தின் போது காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க வேண்டும்.

மக்களை மீளக் குடியேற்றி அடிப்படை வசதிகளை வழங்க வேண்டுமென ஐ. தே. கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியது. இதன் போது எம் மீது புலி முத்திரை குத்தப்பட்டது. இன்று இவ் விடயங்களையே ஐ. நா அறிக்கையும் வலியுறுத்தியுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக