11 மே, 2011

இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சு: ஜனாதிபதி

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இதுவரை பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்துமுடிந்துள்ளன.

இன்னும் சில தினங்களில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. அந்த வகையில் அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் தீர்வுகாண்பது குறித்து பேச்சு நடத்தப்படும்.

அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை.

குற்றம் இழைக்காத எமக்கு எவரும் மரண தண்டனை வழங்க முடியாது. வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் சரியான எண்ணிக்கை எவர் வசமும் இல்லை. அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதனை கண்டறிவதற்காக நாம் அடையாள அட்டைகளை அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்க முயன்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதர கட்சிகளும் இது மனித உரிமையை மீறும் இராணுவ அடக்கு முறை என்று கண்டித்ததன் காரணமாக அம்முயற்சியை அரசாங்கம் கைவிட்டது. அதனை நாம் அன்று செய்திருந்தால் இப்போது வன்னிப் பிரதேசத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதனை துல்லியமாக கூறக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.

1981 ஆம் ஆண்டுக்கு பின்னர் வட பகுதியில் இருந்து எத்தனையோ பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அதன் காரணமாக அவர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியாதுள்ளது. பயங்கரவாத யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் வெளிநாட்டவர்களுடன் போரிடவில்லை. எமது நாட்டு பிரஜைகளை பாதுகாக்கவே போரிட்டனர்.

அதனால் அவர்கள் இந்த யுத்தத்தின்போது மனித உரிமைகளை மீறி நடக்கக்கூடாது என்பதற்காக விசேட அறிவுறுத்தல்கள், வகுப்புக்கள் என்பவற்றை படையினருக்கு வழங்கினோம். இதனால்தான் யுத்தத்தின்போது பொது மக்களை இராணுவத்தினர் மரணத்திலிருந்தும் காப்பாற்றினர் என்றும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல, நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில் ,

கதறியழுத பெண்

வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த சமயம் தமிழ் பெண் ஒருவர் இராணுவத்தினரை பார்த்து எங்களை காப்பாற்றுங்கள், புலிகள் எங்களை படுகொலை செய்கிறார்கள் என்று கதறியழுதார். யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, கூட்டமைப்பின் பெரும்பாலான எம்.பி. க்கள் வெளிநாடுகளில் இருந்தனர். கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் மாத்திரமே வன்னியில் தங்கியிருந்தார். அவர் அரசாங்க தரப்புக்கு வந்துகொண்டிருந்த சமயம் 600 பொது மக்களை புலிகள் சுட்டுக்கொன்றதை தான் நேரில் கண்டதாக கூறியிருக்கிறார்.

ரஷ்யா, சீனா ஆதரவு

தருஷ்மன் அறிக்கை ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக ரஷ்யாவும் சீனாவும் இலங்கையை முழுமையாக ஆதரிக்கின்றன. அதேபோன்று உலகின் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன. நாம் யுத்தக் குற்றங்கள் எதனையும் இழைக்கவில்லை. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள். இதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதனை முழு உலகுக்கும் எடுத்துக்காட்டவேண்டும். அப்போது இது வலுவிழந்துவிடும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் பதுங்கு குழிகளில் பெருந்தொகை அரிசி, கோதுமை மா மூடைகளை கண்டுபிடித்தோம். இதிலிருந்து நாம் மக்களுக்கு எவ்வளவு தொகை உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தோம் என்பது புலனாகும் என்றார்.

தருஷ்மன் அறிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்தியா எப்போதும் எமக்கு சார்பாகவே உள்ளது. இந்தியாவின் ஆதரவு எப்போதும் எமக்கு உள்ளது. அதேவேளை, தென்னிந்தியாவில் சிற்சில பிரச்சினைகள் இருந்துவருகின்றன என்று கூறினார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்நிலையில் அமைச்சர் பீரிஸ் கூறுகையில், தருஷ்மன் அறிக்கை ஒருதலைப்பட்சமானதாகும். இது தொடர்பில் நாம் இந்தியாவுடன் பேசிவருகின்றோம். இந்தியா எமக்கு ஆதரவாகவே செயற்படுகின்றது. நாம் தருஷ்மன் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொள்ளும் நற்பணிகள் குறித்தும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் செய்துவரும் மனிதாபிமான பணிகள் குறித்தும் ஆதாரபூர்வமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பிவைப்போம் என்றார்.

இதேநேரம் இடையில் குறுக்கிட்ட ஜனாதிபதி, இதுவொரு வரவேற்கத்தக்க விடயமாகும். யுத்தத்தின் இறுதி வாரங்களில் நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றி வெளிநாடுகளில் உள்ள எமது தூதுவர்கள் எடுத்துக்கூறுவார்கள். ஐ.நா.வுக்கான முன்னாள் இலங்கையின் வதிவிட பிரதிநிதி நீல் புனே எமது மனிதாபிமான நடவடிக்கைகளை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் நாம் ஏற்கனவே அரசாங்கம் மேற்கொண்டுள்ள மனிதாபிமான, நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபர் தலைமையில் ஒரு சிரேஷ்ட குழுவை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு

இதேவேளை, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை காலதாமதமின்றி வெளியிடலாம்தானே ? அவ்வாறு வெளியிட்டால் அது தருஷ்மன் அறிக்கைக்கு ஈடாக இருக்கும் அல்லவா? என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி தருஷ்மன், அறிக்கை போன்று ஆதாரமற்ற ஒருதலைபட்சமான ஒரு அறிக்கையாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமையக்கூடாது என்பதால், அதனை நல்ல முறையில் தயாரிக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுக்களை மேற்கொண்டுவருகின்றது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவில் உள்ளன என்று பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இது குறித்து பேராசிரியர் பீரிஸ் பதிலளிப்பபார் என்றார்.

கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை

அமைச்சர் பீரிஸ் குறிப்பிடுகையில், நாம் கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி முடித்திருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் அவர்களை சந்தித்து பேசுவோம் என்றார். இந்நிலையில் ஜனாதிபதி குறுக்கிட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் கட்சி உட்பட சகல தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறøவேற்ற நாம் முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

வட மாகாண சபை தேர்தல்

மேலும் வடக்கில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி பதலளிக்கையில், கிழக்கு மாகாணத்தை போன்று வடக்கில் தேர்தலை நடத்துவோம். யுத்தம் காரணமாக குடிபெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னர் அங்கு புதையுண்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றியபின்னர் வட பகுதி மக்கள் தொடர்பான புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 1980 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பே தற்போதும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே புதிய வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். இன்றேல் தேர்தல் முடிவுகள் வெளிவரும் பட்சத்தில் அதனை கம்ப்யூட்டர் ஜில்மாட் என்று கூறுவார்கள் எனத் தெரிவித்தார்.

இந்திய குழுவினரின் விஜயம்

இந்திய குழுவினரின் விஜயம் குறித்து கேள்வியெழுப்பியபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இவை அனைத்தும் நட்புறவுடன் கூடிய இராஜதந்திர விஜயங்கள் என்று குறிப்பிட்டார். இதேவேளை இதுவரை இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லையே என்று வினவியபோது, நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றால் அது ஆதரவு என்றுதானே அர்த்தம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நோர்வேயில் உள்ள அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தமக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் மற்றும் இராணு>வ அதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தகவல் வழங்கினால் நடவடிக்கை

ஊடகவியலாளர்களுக்கு தீங்கிழைக்கும்போது அவற்றை விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கின்றது. இதுகுறித்து உங்கள் கருத்து என்னவென ஜனாதிபதியிடம் வினவியபோது, அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், சமீபத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று இதர ஊடகவியலாளர்களும் எமக்கு தகவல்களை வழங்கினால் நாம் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். ஊடகவியலாளர்கள், சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பில் புகார் செய்தால் மாத்திரமே எம்மால் தாக்கிய நபரை கண்டுபிடிக்கவோ கைது செய்யவோ முடியும்.

கீத் நோயார், உபாலி தென்னக்கோன் ஆகிய ஊடகவியலாளர்கள் தம்மை தாக்கியவர்களை எமக்கு கூறினால் நாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாத பட்சத்தில் எம்மால் என்ன செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தனியார் ஓய்வூதியம்

இந்நிலையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊடகத்துறையை சேர்ந்தவர்களின் நிலை என்ன என ஆசிரியர் ஒருவர் கேட்டதற்கு, ஜனாதிபதி பதிலளிக்கையில், ஊடகத்துறையினருக்கு என தனியான ஓய்வூதியம் என்று இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாகவே இது அமையும். இது தொடர்பான நிதிக்கு உத்தரவாதமாக அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

உண்மையில் இது தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதனை உடன் நடைமுறைப்படுத்துமாறு வீதியில் இறங்கி போராடுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இதற்கு மறு தலையாகவே அனைத்து காரியங்களும் இடம்பெறுகின்றன. தனியார் துறை ஊழியர்கள், வெளிநாட்டில் பணி புரிபவர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் என மூன்று ஓய்வூதிய திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதனால் வயோதிப காலத்தில் அரச ஊழியர்கள் பெறுவது போன்று தனியார் துறையினரும் அதனை பெற்று நிம்மதியாக வாழலாம்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பி.யும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியை நாம் சூறையாடப் போவதாக கூறி தவறான பிரசாரங்களில் ஈடுபடுகின்றன. இத்தகைய அரசியல் இலாபம் கருதிய போலிப் பிரசாரங்கள் வருந்தத் தக்கவையாகும். தனியார் துறை நிறுவனங்கள் தமக்கென புறம்பான ஊழியர் சேமலாப நிதியங்களை வைத்து அந்தப் பணத்தை கம்பனியின் இதர தேவைகளுக்கு பயன்படுத்துகின்றன. இது தொடர்பில் பல்வேறு ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக