16 மார்ச், 2011

வாழை மடலில் இருந்து உபயோக பொருட்கள் 10 இலட்சம் மனை பொருளாதாரத் திட்டத்துடன் இணைந்ததாக அமுல்படுத்த திட்டம்






வாழை மடலில் இருந்து பல்வேறு அலங்காரப் பொருட்கள், பைபர், துணி போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் மற்றும் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் அறிமுகப்படுத்த உள்ளதாக பாரம்பரிய மற்றும் கிராமியக் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

10 இலட்சம் மனைப் பொருளாதார திட்டத்துடன் இணைந்ததாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப் பட உள்ளதோடு முதலில் யாழ்ப்பாணம், எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வாழை மடலில் இருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவி யலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக் களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாழை மடலிலிருந்து பொருட்களை தயாரிப்பதன் மூலம் மேலதிக வருவாய்பெறவும் இயற்கை அழிவுகளால் ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்யவும் சூழலை சுத்தமாக வைத்திருக்கவும் சுயதொழிலாக மேற்கொள்ளவும் முடியும். இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும் யு. என். டி.பி. யின் உதவியுடனும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

கித்துல், பனை என்பன கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்தது போன்று வாழை மடல் மூலமும் பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.

அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கூறியதாவது, இலங்கையில் சுமார் 52 ஹெக்டயாரில் வாழைமரம் பயிரிடப்படுகிறது. வெட்டி ஒதுக்கப்படும் வாழை மடலில் இருந்து பொருட்களை தயாரிப்பதன் மூலம் வேலையின்மை, வறுமை என்பவற்றுக்கு தீர்வு காண முடியும்.

மனைப் பொருளாதார திட்டத்துடன் இணைந்ததாக இதனை முன்னெடுக்க உள்ளோம். இந்த தொழில் நுட்பத்தை இங்கு அறிமுகப்படுத்த இந்தியா முன்வந்துள்ளது.

இரு விஞ்ஞானிகளை இந்தியா இங்கு அனுப்பியுள்ளது. இவர்கள் இந்த தொழில்நுட்ப அறிவை இலங்கை மக்களுக்கு வழங்க உள்ளனர் என்றார்.

இங்கு உரையாற்றிய யு. என். டி. பி. வதிவிட பிரதிநிதி டக்ளஸ் கே. கூறியதாவது; இந்த திட்டத்திற்கு உதவ முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த திட்டம் உதவும். இதற்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

அமைச்சர், அதிகாரிகள் பலரும் இங்கு உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக