15 பிப்ரவரி, 2011

நாட்டில் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் புதிய பங்குதாரராக ஜே.வி.பி.

உள்நாட்டின் பல தரப்புக்களின் அனுசரணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு சர்வதேசத்தில் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் புதிய பங்குதாரராக ஜே.வி.பி. இணைந்துள்ளது என்று ஜாதிக ஹெ ல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

நாட்டைத் துண்டாடும் இவ்வாறான நடவடிக்கைகளினால் மீண்டும் பாதிக்கப்பட போவது அப்பாவி தமிழ் மக்களேயாவர். எனவே அரசாங்கம் நாட்டிற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறுகையில், அண்மைக் காலமாக நாட்டிற்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ஜே. வி. பி. போன்ற கட்சிகள் சமஷ்டி முறைமை தொடர்பாக பேசும் அளவிற்கு மேற்படி இனவாத சக்திகள் தேசிய அரசியலுக்குள் ஊடுருவியுள்ளன. இதனை சாதாரண விடயமாக கருத முடியாது.

சமஷ்டி ஆட்சி முறைமை என்பது இரண்டு அல்லது அதற்கு மேலான வெவ்வேறு அரசாங்கம் உள்ள ஒரு நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆட்சியாகும். இதனை இலங்கைக்கு அறிமுகம் செய்வது என்பது நாடு துண்டாடப்பட்டு தமிழீழம் உருவாக்கப்படும் என்பதே ஆகும். எனவே தான் இந்த நாட்டின் மக்களும் தற்போதைய அரசாங்கமும் மேற்படி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே போன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தற்போது மகாநாயக்க தேரர்களையம் தெற்கின் அரசியல் தலைவர்களையும் சந்தித்து அரசியல் தீர்வு குறித்து பேசப் போகின்றனர். ஒரு அரசாங்கம் உள்ள இலங்கையின் தனி இனத்திற்காக வேறு விசேட வரப்பிரசாதங்களோ அரசியல் உரிமைகளோ வழங்க முடியாது. சகல மக்களிற்கும் அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளையே வழங்க முடியும்.

இதனை தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செய்து வருகின்றது எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக