20 பிப்ரவரி, 2011

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டோர் வேறு வழிகளில் பிரசாரம் செய்ய முடியாது: தேர்தல் ஆணையாளர்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் போட்டியிடும் வேறு அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகத் தமது பெயர்களைப் பதிலீடு செய்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா இது குறித்து நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போட்டியிடுகின்ற ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் அல்லது ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்கள் சார்பாக உரிய தேர்தல் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் இலக்கங்களின் கீழ் போட்டியிட வேறெந்தவொரு நபருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றும் எவரேனும் ஒரு வேட்பாளரின் பெயரைப் பதிலீடு செய்ய முடியாதெனவும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலொன்றில் வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர், போட்டியிட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளுக்கு விகிதாசாரமாக குறித்த கட்சி அல்லது குழு உரித்தாக்கிக் கொண்டுள்ள உறுப்புரிமைகளின் எண்ணிக்கை அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள வேட்பாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

எவரேனும் ஓர் உறுப்பினரின் மரணம், கேட்டு விலகல் மற்றும் வேறெனுமொரு காரணமொன்றினால் வெற்றிடம் ஏற்படுகின்ற போது அவ்வெற்றிடத்திற்குத் தகுதியான நபரொருவராக அக்கட்சியின் அல்லது அக்குழுவின் கீழ் போட்டியிட்டு கணிசமானளவு விருப்புக்களைப் பெற்றுள்ள வேட்பாளர்கள் உரிய கட்சிச் செயலாளரால் அல்லது சுயேட்சைக் குழுத் தலைவரால் குறிப்பாகப் பெயர் குறிப்பிடப்படுகின்ற வேட்பாளரே தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக