1 அக்டோபர், 2010

வைராக்கியம் பிடித்த அரசாங்கம் விரைவில் அழியப் போகிறது : டில்வின் சில்வா

ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால், அவரை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் வேரோடு அழியப் போகின்றது என்று டில்வின் சில்வா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நாட்டில் சட்ட ஒழுங்கின் மீது நம்பிக்கை வைக்க முடியாதளவுக்கு அரசாங்கத்தின் சர்வாதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார். இது வேடிக்கையாகவே உள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு சொல் புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது. எனவே ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை ஆர்ப்பாட்டங்களின் ஊடாக அழுத்தித்தான் கூற வேண்டியுள்ளது.

ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் விரைவில் வேரோடு அழியப் போகின்றது.

எனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான அரசாங்கத்தின் பழிவாங்கும் நோக்கத்திற்கு எதிராக இறுதி வரை போராடுவோம். அச்சுறுத்தல்களைக் கண்டு பின்வாங்கப் போவதில்லை" என்றார்.

நாளை கடவத்தையிலும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக