9 செப்டம்பர், 2010

18வது திருத்தத்திற்கு ஆதரவு; நாடெங்கும் ஆர்ப்பாட்ட பேரணிகள் மனிதச் சங்கிலி போராட்டங்கள்

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு உட்பட நாடெங்கிலும் நேற்று ஊர்வலங்களும் மனிதச் சங்கிலி போராட்டங்களும் நடைபெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வர்ணப் புகைப்படத்தை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலங்களும், மனித சங்கிலிப் போராட்டங்களும் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களிலும், மனித சங்கிலி போராட்டத்திலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பாராளுமன்ற சந்திவரை நடாத்தப்பட்ட மனித சங்கிலி பேரணிக்கு துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமை தாங்கினார்.

இத்திருத்தத்திற்கு ஆதரவாக வத்தளை, களனி தொகுதி மக்கள் முன்னாள் பிரதியமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தலைமையில் பாராளுமன்ற சந்திக்கு மனித சங்கிலி ஊர்வலமாகச் சென்றனர்.

கடுவெல சந்தியிலிருந்து பாராளுமன்றச் சந்தி வரை சென்ற மனித சங்கிலி ஊர்வலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் ஆரம்பித்து வைத்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல தொகுதிகளிலிருந்தும் மனித சங்கிலி ஊர்வலங்கள் நடாத்தப்பட்டன.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றச் சந்தியில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கத் தலைவராகவும் தொழில் அமைச்சராகவும் இருந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு பல்வேறு சேவைகள் ஆற்றியவர்.

புதிய யாப்புத் திருத்தத்தின் மூலம் 3 மாதத்திற்கு ஒரு தடவை ஜனாதிபதி கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற வேண்டும். இது ஜனநாயகத்தை பலப்படுத்தும் செயற்பாடாகும். இன்றும், என்றும் உழைக்கும் வர்க்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனே கைகோர்த்திருப்பர் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த திலங்க சுமதிபால எம்.பி.; ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காகவே அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்கால ஸ்திரத்திற்கு வழங்கப்படும் வாக்குகளாகும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட பல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் எம்.பிக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதேவேளை சுதந்திர ஆசிரியர் தொழிற்சங்கம் உட்பட பெருந்திரளான தொழிற்சங்கங்கள் அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலங்களையும், மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நேற்று நடாத்தின.

துறைமுக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணி லிபர்ட்டி சுற்று வட்டத்தில் நடைபெற்றது. பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதேநேரம் இத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அத்தனகல்லை, கடுவெல, பதுளை உட்பட நாட்டின் பல நகர்களிலும் பிரதேச மக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக