27 ஆகஸ்ட், 2010

திருட்டுத்தனமான அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்போம் :ஜே.வி.பி

மக்களின் கருத்தையும் விருப்பத்தையும் அறியாது திருட்டுத்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த யோசனைகளை செப்டெம்பர் மாத முற்பகுதியில் அ“வசர அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தோற்கடிக்கவும் நாட்டை பாதுகாப்பதற்கும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மக்கள் சக்தியை அணிதிரட்டுவோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். வாரத்திற்கு ஒருமுறை ஜனாதிபதியை சந்தித்து வருகின்ற எதிர்க்கட்சித் தலைவருக்கே திருத்தம் தொடர்பில் அறியக்கிடைக்கவில்லை. இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டி வருகின்ற ஜனாதிபதி திருத்த யோசனை குறித்து வெளிப்படுத்த அச்சப்படுகிறார் என்றால் அதில் ஏதோ இருக்கிறது. என்பதே அர்த்தமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

நிறைவேற்று அதிகாரமுறை தொடர்பில் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே வெளிப்படுத்திவருகின்றது. நிறைவேற்று அதிகார முறைமையில் எமக்கு உடன்பாடு கிடையாது. என்வேதான் அதனை இல்லாதொழிக்க வேண்டுமென்று நாம் கூறுகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இதனை இல்லாதொழிக்க சிறந்தவர் என்றும் இரண்டாம் முறையாகவும் அவர் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இப்போது நடைபெறுவது தலைகீழானதாகும்.இப்போது நிறைவேற்று அதிகார முறைமையை மூன்றாவது முறைக்கும் நீடிப்பதற்கான திட்டத்தில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது.

மேலும் அரசியலமைப்பை மாற்றியமைக்கத் தேவையில்லை என்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படின் அது மக்களின் கருத்தினை அறிந்து அவர்களது விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தெரிவித்து வந்தோம்.இருபபினும் இவை எதையுமே கருத்தில் கொள்ளாத அரசாங்கம் திருட்டுத்தனமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் அங்கீகாரமில்லாத திருத்தங்களை அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் போது சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றது.

இந்த திருத்தங்களை நிறைவேற்று கொள்வதன் மூலம் நாடோ, மக்களோ பயனடையப்போவதில்லை. மாறாக தனியொரு குடும்பம் மாத்திரமே அரசியல் ரீதியாக பலமடையப்போகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடு முற்றிலும் பிழையானது. ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் அதேநேரம் முறையற்ற விதத்திலுமான செயற்பாடுகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக் கொள்கின்றதா என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வாரத்துக்கு ஒருமுறை அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திவருகிறார். அங்கே நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக நிறைவேற்று அதி“காரம் கொண்ட பிரதமர் முறை குறித்து பேசப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பில் கொண்டுவரப்படுகின்ற திரு“த்தம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பேச்சுக்களின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இருவருமே இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.

இதில் இன்னொரு விடயம் என்னவெனில் கொண்டுவரப்படவிருக்கின்ற திருத்தங்கள் தொடர்பில் பேச்சில் கலந்துகொண்ட ரணிலுக்கே அறிவிக்கா திருப்பதுதான். அரசியலமைப்பில் திருத்தஞ்செய்யும்போது ஏனைய கட்சிகளிடத்திலும் பேசி கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் சக்தியை அறிந்து அவர்களது கருத்தையும் விருப்பத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியமானதாகும். ஆனாலும், எதுவுமே இல்லாது அவரசப்படுகின்ற அரசாங்கம் தனது யோசனைகளை எப்படியாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் நல்ல ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார்.

தற்போது ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து இருவர் அரசு பக்கம் தாவியுள்ளனர். இன்னும் சிலர் தாவுவதற்கு தயாராக இருக்கின்றனர்.

இவ்வாறு பாராளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசு பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றது. எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற இந்த ஜனநாயக விரோத, பண்பாடற்ற திருத்தங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜே.வி.பி. இடமளிக்காது.

அந்த வகையில் குறிப்பிட்ட சிறிய காலப்பகுதிக்குள் இந்த முறையற்ற யோசனைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதுடன் எமது எதிர்ப்பையும் வெளிக்காட்டுவோம். இதற்கென நாட்டின் சமூக நலன் விரும்பிகள், ஜனநாயக விரும்பிகள், புத்திஜீவிகள் அனைவரையும் இணைத்துக்கொண்ட மக்கள் சக்தியை அணிதிரட்டும் பணியை ஜே.வி.பி. ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் முறையற்ற யோசனைகள் தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விழிப்புணர்வையும் ஒரு தடவைக்கு மேல் சிந்தித்துப்பார்க்கும் நிலைமையையும் ஜே.வி.பி. உருவாக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக