4 ஆகஸ்ட், 2010

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று மின் உற்பத்தி மூலம் சலுகையுடன் மின்சார வசதி ஜனாதிபதி


சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மாற்று மின் உற்பத்தி மூலம் நுகர்வோருக்கு மிகவும் சிறந்த சலுகையுடன் மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

தேசிய எரிசக்தி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிசக்தி மின்சக்தி அமைச்சும், இலங்கை மாற்று எரிசக்தி அதிகார சபையும் இணைந்து சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள ‘விதுலகா’ நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இவ்வைபவத்தின்போது விதுலகா கண்காட்சியையும், கருத்தரங்கையும் ஜனாதிபதி தொடக்கி வைத்தார்.

இதன் நிமித்தம் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் கடந்த காலங்களில் எரிசக்தி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். அந்தந்த சந்தர்ப்பங்களில் அந்நெருக்கடிகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன. குறிப்பாக 1970 களிலும், 1980களிலும் இவ்வாறான நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டோம். எண்ணெய் நெருக்கடி காரணமாக அண்மையிலும் கூட எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தது.

இவ்வாறான நிலையில் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழி வகைகள் குறித்து நாம் கவனம் செலுத்தினோம். அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம். மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தக்கூடிய இயற்கை வளங்கள் எம்மிடம் உள்ளன. நீர், காற்று, சூரிய ஒளி என்பன அவற்றில் பிரதானமானவை.

சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்துள்ளோம். இத்துறையில் நாம் முன்னேற வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நாம் இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்போது பல விதமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அவற்றை எம்மால் காணமுடிகின்றது.

இருநூறு சிறிய நீர்மின் திட்டங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளன. அவை சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும்.

நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் 85 சதவீதத்தை நாம் உற்பத்தி செய்கின்றோம். இதனை நூறு சதவீதம் உற்பத்தி செய்வதே எமது நோக்கம். இந்த அடிப்படையில் தான் நுரைச்சோலை, மேல் கொத்மலை, மின் திட்டங்களை அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே இவ்விரு மின் திட்டங்களையும் ஆரம்பிக்கும் வேலைகள் பல வருடங்கள் தாமதமாகின. அப்போதைய ஆட்சியாளர்கள் சரியான முடிவுகளை எடுக்காததே இதற்குக் காரணம். இருப்பினும், நாம் நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டு சரியான தீர்மானத்தை எடுத்து இம்மின் திட்டவேலைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றோம்.

கிராமிய மின் திட்டத்திற்கு ஈரானிய அரசு எமக்கு உதவி வழங்கியுள்ளது. சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இவ்வேலைத் திட்டத்தை செயற்படுத்தி நுகர்வோருக்கு மிகவும் சிறந்த சலுகையுடன் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டத்திற்கு நாம் பங்களிப்பு செய்ய வேண்டும். இதனை நான் நினைவூட்ட விரும்புகின்றேன். சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டை முன்கொண்டு செல்லும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்கான வழிகாட்டலை நாம் அரசுக்கு வழங்கியுள்ளோம்.

சுற்றாடலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் உற்பத்திகள் இங்கு இடம்பெறுவது தொடர்பாக சர்வதேசத்திற்கு செய்தி வழங்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. எதிர்கால நெருக்கடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு சுற்றாடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத வேலைத் திட்டங்கள் பெரிதும் உதவும் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம ஜயந்த், பிரதியமைச்சர்கள் பிரேமலால் ஜயசேகர, முத்து சிவலிங்கம், மாகாண அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக