24 ஜூன், 2010

ஹைகோப் நிதி மோசடி: 3வது சந்தேகநபர் பொன்சேகாவுக்கு 28ம் திகதி வரை விளக்கமறியல்

இராணுவத்துக்கு பொருட்கள் கொள்வனவு செய்ததில் ‘ஹைகோப்’ விலை மனுக்கள் நிதி மோசடி சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று (23) உத்தரவிட்டார்.

முறைப்பாட்டு தரப்பில் தோன்றிய அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி, தமித் தொடவத்தை கேட்டுக்கொண்ட பேரில், தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட சந்தேக நபரான சரத் பொன்சேகாவை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கடற்படை தலைமையகத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தடுப்புக் காவலில் ஏனைய சந்தேக நபர்களுடன் தடுத்து வைக்கப்பட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் கடற்படையின் பொறுப்பிலேயே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படவேண்டுமென சட்டத்தரணி தமித் தொடவத்த நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

அரச சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று நீதிமன்றத்தில் கூறியதற்காக சரத் பொன்சேகா சார்பாக வாதாடிய அவரது சட்டத்தரணி நளின் லடுவாஹெட்டி நன்றி தெரிவித்தார்.

தடுப்புக்காவலில் இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினரான சந்தேக நபரை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அமர்வு நாட்களில் அந்த அமர்வுகளுக்கும் அவர் அங்கத்துவம் வகிக்கும் தெரிவுக் குழுக்கள், ஆலோசனை குழுக்கள் மற்றும் கட்சித் தலைவர் கூட்டங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற அமர்வுகளின்போது குறிப்பிட்ட நாட்களில் அவரை பங்குபெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸாருக்கும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக