24 ஜூன், 2010

சந்தேகத்தின் பேரில் கைதான எங்களை விடுவியுங்கள் : தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை



பல வருடங்களுக்கு மேலாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்பு செயலாளருக்குக் கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

"பல வருடங்களாக சந்தேகத்தின் பேரில் கைதாகி விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் தங்களுக்கு இம்மடலை வரைகின்றோம்.

எமது நாட்டில் தற்போது சுமுகமான சூழல் நிலவுகின்றது. இத்தகைய சூழலிலும் எங்களால் எமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ முடியாதுள்ளது. நீண்ட வருடங்களாக வழக்குப் பதிவு ஏதுமின்றி, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் இன்னும் எத்தனை வருடங்களுக்குச் சந்தேகம் எனும் பெயரில் தடுப்புக் காவலில் இருப்பது?

நாங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் எங்களது குடும்பத்தினர் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி அவர்கள், தற்போது கைதான பல விடுதலைப் புலி போராளிகளுக்கென சிறந்த செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவர்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கும் உள்ளத்துடன் அண்மையில் திருமணம் கூட நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை கைதிகளாகிய எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தாலும், கைதாகி பல வருடங்களாகியும் நாம் பிணையில் கூட செல்ல முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோமே, ஏன்?

அதுமட்டுமன்றி, தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் குறைந்தது ஐந்து வருடங்களில் இருந்து 17 வருடங்கள் வரை (1993 முதல் - இன்று வரை) சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குச் சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவீர்களா?

போராட்டங்களில் பலனில்லை

எத்தனை போராட்டங்கள், எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை கோரிக்கைக் கடிதங்கள் என பலவாறான நடவடிக்கைகள் எடுத்தும் எந்தப் பலனும் எமக்குக் கிடைக்கவில்லையே?

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகி விட்டது. இருப்பினும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்களை பிணையிலாவது செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களால் எங்களை விடுதலை செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ சிறுவயதில் தவறுகள் செய்திருக்கலாம். அதற்காக இத்தனை வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோமே?

பல நல்ல திட்டங்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் ஜனாதிபதி, எங்கள் மீதும் கரிசனை காட்ட வேண்டும் என்று கைதிகளாகிய நாங்கள் அனைவரும் கண்ணீருடன் கோருகின்றோம்.

எங்கள் அனைவரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்து சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். சிறு வயதில் கைதாகிய நாம் இளமைக்காலம் முழுவதையும், சிறைச்சாலைகளிலேயே கண்ணீருடனும் கவலையுடனும் கழிக்கின்றோம்.

எங்கள் விடுதலைக்காக இறுதியாக தங்களிடம் தாழ்மையுடன் கேட்கிறோம். பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பிணையிலாவது செல்ல எங்களை அனுமதியுங்கள்."

இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக