24 ஜூன், 2010

அபிவிருத்தி புரட்சிக்கு ஊறுவிளைவிக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை


ஜனாதிபதி முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தி புரட்சிக்கு ஊறுவிளைவிக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல எந்தவொரு நபருமே இவ்வாறான எண்ணத்தில் செயற்படுவார்களேயானால் அவற்றுக்கு எதிராக அரசில் அங்கம் வசிக்கும் பிரதி அமைச்சர் என்ற வகையிலும், களனி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற வகையிலும் மக்களுடன் அணிதிரளுவேன் என பிரதியமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆதரிக்க வேண்டியது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கடமையும் பொறுப்புமாகும் என்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஜனாதிபதி அவரது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள நிலையில் தற்போது பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க கடமைப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் படி நாட்டின் இறைமை மக்களில் தங்கியுள்ளது. பாரா ளுமன்றம் இறைமையை பிரதிநிதித்துவம் செய்கிறது. நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடைமுறைக்கேற்ப அரசியலமைப்பை திருத்தும் பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு உள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்த வொரு ஜனாதிபதியும் இரு தடவைகளுக்கு மேல் அப்பதவியில் இருப்பதற்கு வகை செய்யும் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கும் நேரத்தில், சில அரச சார்பற்ற தொண்டர் அமைப்பு களும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில நபர்களும் மக்களை தவறாக வழி நடத்தி, உத்தேச சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சதியில் ஈடுபடுகின்றனர்.

ரணிலின் மாமனாறான ஜே. ஆர். மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது, ரணிலும் அவரது கையாட்களும் கோழைகளைப் போல் அவரிடம் ராஜினாமா கடிதங்களை கையளித்தனர். அதே ரணிலும் அவரது கையாட்களும்தான் இப்போது வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் இரு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாதிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களும் இரு தடவைகளுக்கு மேல் பதவியில் இருக்க முடியாது. அத்துடன் பல தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ தொடர முடியாது.

ரணில் மற்றும் அவரது கையாட்களின் இந்த பைத்தியக்காரத்தனமானது ஜனாதிபதியின் பாரிய அபிவிருத்தி முயற்சிகளையும் சமாதான நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிடும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியாகும். அதன் மூலம் வெளிநாட்டிலிருந்தும், புலிகளுக்கு நிதி உதவி வழங்கும் அரச சார்பற்ற அமைப்புகளில் இருந்தும் பணத்தை பெற்றுக்கொள்ளவே அவர்கள் இதனை செய்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக