16 ஏப்ரல், 2010

இளந்தம்பதியரை ஏமாற்றிய இருவர் விளக்கமறியலில் : மட்டக்களப்பில் சம்பவம்



மட்டக்களப்பு மாநகரில் இரவு வேளை, இளம் தம்பதியரைத் தாம் விமானப்படை புலனாய்வுத் துறையினர் எனக் கூறி ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநாகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு உப்புக்கராச்சி பகுதியில் இரவு 7.30 மணியளவில் சைக்கிளுடன் நடந்து சென்ற இளம் தம்பதியரை, மற்றொரு சைக்கிளில் வந்த குறித்த இரு மாநகர சபை ஊழியர்களும் இடைமறித்துள்ளனர். தாம் விமானப்படை வீரர்களென்றும் சோதனை செய்ய வேண்டுமென்றும் இவர்களைப் பயமுறுத்தி மட்டக்களப்பு நகரின் திருப்பெருந்துறை பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகம் கொண்ட தம்பதியர் தப்பியோடி வந்து அருகிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துப் பொலிஸார் ஒருவரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிபதி வீ. ராமக்கமலன் முன்னிலையில் ஆஜர் செய்தனர். குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாற்ம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இரு தினங்களின் பின்னர் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 19 ஆம் திகதி இரண்டாவது சந்தேக நபரை ஆளடையாள அணி வகுப்புக்குட்படுத்துமாறு நீதிபதி ராமக்கமலன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குப் பணித்துள்ளார்.

இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மஞ்சந்தொடுவாய், வீச்சுக்கல்முனை பகுதிகளை சேர்ந்த தற்காலிக மாநகர சபை தொழிலாளர்கள் எனப் பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவித்தது.

இது குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக