ஆறாவது நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வுகளைக் கண்காணிப்பதற்கென நேற்று வருகை தந்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தார். அத்துடன் மேற்படி உறுப்பினர்களுடனேயே மதிய உணவையும் உண்டார்.
பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக் கொள்வதற்கென மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் விசேட அறிவித்தலின் பிரகாரம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.
அன்றைய தினம் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக்கொண்டதன் பின்னர் சபை ஏப்ரல் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற விசேட அமர்வுகள் மீண்டும் இடம்பெற்றன.
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான நேற்றைய அமர்வின் வாத, பிரதி வாதங்களை அவதானிப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் இருந்தவாறே அமர்வுகளை ஜனாதிபதி அவதானித்தார். சபை அமர்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பகலுணவுக்காக சென்ற உறுப்பினர்களைச் சந்தித்து நலம் விசாரித்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
அதேவேளை, நாடாளுமன்ற அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக