7 ஏப்ரல், 2010

முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களில் கண்காணிப்பாளருக்கு அனுமதி


பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் முதற் தடவையாக அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல்கள் கண்காணிப்பு பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

தேர்தல்களை வாக்குச் சாவடிகளுக்குள் இருந்தபடி கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் இவ்விரு ஸ்தாபனங்களுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பது தெரிந்ததே.

இதேவேளை பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியின் வரையறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஹெட்டியாராச்சி கூறினார்.

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியில் 24 பேர் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 22 பேர் மாவட்டத்திற்கு ஒருவர் படியும், இருவர் தேர்தல் செயலகத்திலும் பணியில் ஈடுபடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக