8 ஜனவரி, 2010

முல்லைத் தீவில் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையும் வெடிப்பொருட்களும் கண்டு பிடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் மோதுவதற்காக வெடிகுண்டுகள், கிளேமோர் கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களை வெடிக்க வைப்பதற்கான டெட்டனேற்றர்கள் மற்றும் எலக்ரோனிக் உபகரணங்கள் என்பவற்றை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலை ஒன்றினை கண்டு பிடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு மற்றும் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் நிலத்துக்கடியில் செயற்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலைகள் இராணுவத்தினர் முன்னேறி வந்ததையடுத்து, விடுதலைப் புலிகளினால் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடங்கள் பற்றி படையினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களையடுத்து கண்டு பிடிக்கப்பட்டு, பெருமளவிலான வெடிப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளேமோர் கண்ணி வெடிகளையும் சக்தி வாய்ந்த குண்டுகளையும் 30, 40 மீற்றர் தொலைவில் இருந்து வெடிக்க வைக்கத்தக்க ரிமோட் கண்ரோல் உபகரணங்களையும் அவற்றுக்கான சார்ஜர்களையும் விடுதலைப்புலிகள் இந்தத் தொழிற்சாலையில் ஏனைய வெடிப் பொருட்கள் உபகரணங்களுடன் உற்பத்தி செய்து வந்துள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக