மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மகாநாட்டில் அறிவித்துள்ளார்.
இம்மாகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபக செயலாளரான இவர் இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர முதல்வராகத் தெரிவானார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகத் தலைவரான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனிலிருந்து நாடு திரும்பி இகட்சியின் உட்பூசல் காரணமாக விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் உப தலைவராகத் தெரிவானார்.
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு இவருக்கு விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை விட்டு விலகி 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சி நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொகுதி ரீதியாக மட்டக்களப்பு தொகுதி - அமைச்சர் அமீர் அலி, பட்டிருப்புத் தொகுதி - அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன், கல்குடா தொகுதி - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்தமை தொடர்பாக இவர் அதிருப்தியடைந்திருந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்திருந்ததாகவும் பரவலாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக