8 ஜனவரி, 2010

காத்தான்குடியில் சரத் பொன்சேகாவின் பிரசார கட்அவுட் சேதம்

மட்டக்களப்பு காத்தான்குடியில் எதிர்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கட்அவுட் நேற்றிரவு இனந்தெரியாத குழுவொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குட்வின் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த, கட் அவுட் ஜெனரல் சரத் பொன்சேகா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் சேகுதாவுத் பஷீர் மற்றும் அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் யூ.எல். எம்.முபீன் ஆகியோரின் உருவப் படங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
ஒருவார காலமாக அந்த இடத்தில் அமைந்திருந்த குறிப்பிட்ட 'கட்அவுட்' கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான வாகனமொன்றில் வந்த குழுவினராலேயே சேதமாக்கப்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் யூ. எல்.எம். முபீன் குற்றம் சுமத்துகின்றார்.
இந்நபர்களைப் பொது மக்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறும் அவர் இது தொடர்பாக தமது கட்சித் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் பொது வேட்பாளருக்கும் தன்னால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஆனால் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தக் குற்றச்சாட்டு நிராகரிகப்பட்டுள்ளது.