22 நவம்பர், 2010

புதிய வரிக் கட்டமைப்பு, சம்பள உயர்வு பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்கள்

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படை விடயமாக இம்முறை வரவு செலவுத் திட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க த்தினால் முன்வைக்கப்படும். புதி ய வரிக்கட்டமைப்பு, அரச ஊழிய ர்களுக்கு சம்பள உயர்வு, மக்களுக்கு நிவாரணங்கள், அபிவிருத்திக்கான தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய அம்சங்கள் வரவு செலவுத்திட்டத்தில் இடம்பெறும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் வீரவங்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது தடவை பதவிக்காலத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியே சபையில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுவார் என்றும் தெரிகின்றது.

இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவங்ச வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவுத்திட்டம் முன் வைக்கப்படவுள்ளது. அதாவது முக்கியமாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

இதுவரை காலம் நாட்டில் பேணப்பட்ட சிக்கலான வரிகட்டமைப்பு முறைமைக்கு பதிலாகசிக்கல்கள் அற்ற புதிய வரிக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும். மேலும் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடையாக அமையும் விடயங்களை நீக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

நாட்டில் அமைதி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை ஏற்கனவே விரைவு படுத்தியுள்ளது. ஆனால் அவற்றை மேலும் விரைவுபடுத்தி அவற்றுக்கு தடையாக இருக்கும் காரணிகளை நீக்கும் வகையில் யோசனைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்பதுடன் பொது மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்குவதற்கான யோசனைகள் இடம்பெறும். இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்றியமைப்பதில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் அடிப்படை விடயமாக அமையும். உள்நாட்டு வர்த்தகர்கள் கைத்தொழிலாளர்கள் ஆகியோரை கட்டியெழுப்புவதற்கு தேவையான உள்ளடக்கங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறும்.

வீடமைப்பு துறை மற்றும் நிர்மாணத்துறைகளிலும் பாரிய வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும் வகையில் அடிப்படை விடயங்கள் யோசனைகளாக முன்வைக்கப்படும் என்றார்.

பந்துல குணவர்த்தன கருத்து

இதேவேளை 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தகவல் வெளியிடுகையில் வரவு செலவுத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் என்னவென்று தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது. ஆனால் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்ட கொள்கையை விளக்க முடியும். அதாவது 2016 ஆம் ஆண்டில் நாட்டில் தனிநபர் வருமானம் 4000 டொலர்களாக அமையும் வகையில் வரவு செலவுத்திட்டத்தின் யோசனைகள் முன்வைக்கப்படும்.

இம்முறை வரவு செலவுத்திட்டமானது ஒரு திருப்புமுனை என்று கூறலாம். புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பின்னணி வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக உருவாக்கப்படும். உற்பத்தி துறை, வருமானம், சேவை, தொழில்கள், விலைமட்டம், கொடுப்பனவுகள், சேமிப்புகள், முதலீடு போன்ற துறைகளில் சாதகமான மாற்றங்கள் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக