2 அக்டோபர், 2010

ஓமந்தை பாடசாலையை ஒரு மாதத்தினுள் மீள ஒப்படைக்க அமைச்சர் டியூ பணிப்பு

ஓமந்தை பாடசாலையை ஒரு மாத காலத்தினுள் கல்வி அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

அப்பிரதேச மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாகவே இந்தப் பாடசாலையை ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

“ஓமந்தை பாடசாலை மிகப்பெரிய பாடசாலையாகும். முப்பது வருட யுத்தத்தின் விளைவாக இன்று அப்பாடசாலை சிறைச்சாலையாக மாறிவிட்டது. இதில் எல். ரி. ரி. ஈயின் முதலாம் தர தலைவர்கள் கைதிகளாக உள்ளனர்.

ஆனால் இப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மரம் செடிகளுக்கு மத்தியில் காட்டை பாடசாலையாக்கி கல்வி பெறுவதைக் கண்டதும் நான் நொந்து போனேன். ஒரு மாத கால இடை வெளிக்குள் பாடசாலையின் கைதிகளை இடம் மாற்றி பாடசாலையை அப் பகுதி கல்வி அதிகாரியிடம் கையளிக்குமாறு சிறையின் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்” என அவர் கூறினார்.

நேற்றுக் காலை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் டியூ குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் வைபவத்துக்கு கொழும்பு பிரதேச செயலாளர் கே. ரி. தர்மதிலக்க தலைமை வகித்தார். இந் நிகழ்வை கொழும்பு பிரதேச செய லகம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் 75 மாணவ மாணவிகளுக்கு

புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இப் புலமைப் பரிசில் மாணவர்களில் 45 பேர் சிறைக் கைதிகளின் பிள்ளை களாவர். தொடர்ந்து அமைச்சர் தெரிவிக்கையில், எல். ரி. ரி. ஈ யினர் என கைதிகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கையில் அப் பிரதேச இளம் வயதினரின் கல்வித்துறையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஓமந்தை பாடசாலை மிக விரைவாக பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை யாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்று பன்னிரெண்டாயிரம் எல். ரி. ரி. ஈ யினர் கைதிகளாக உள்ளனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு கட்டம் கட்டமாக விடுதலை செய்து வருகிறோம். நேற்று 403 பேரை விடுதலை செய்தோம்.

வவுனியாவில் இடம் பெற்ற இவ் வைபவத்துக்கு இவர்களின் உறவுகள் வந்திருந்து இவர்களை மகிழ்வோடு அழைத்துச் சென்றனர். யுத்தம் எவ்வளவு தூரம் மக்களை மட்டுமல்லாது உறவு களையும் பிரித்துள்ளது என்பதை அங்கு நடந்த சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். 900 முன்னாள் எல். ரி. ரி. ஈ. முதலாம் தர பிரிவு தலைவர்கள் உள்ளனர். இவர்கள் மனதளவில் பெரும் பாதிப்பை எட்டியுள்ளனர். இவர்கள் மீது வழக்குகள் உள்ளதுடன், விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. இவர்களையும் புது வழிக்கு அழைத்துச் செல்ல புனர்வாழ்வு பயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறையில் வாடும் கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நலன்புரி வேலைத் திட்டங்களை மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் இன்று பல்வேறு துறைகளில் மாற்றம் பெற்று வருகிறது. இதற்குள் நாமும் இணைந்து செயல்பட வேண்டும். கைதிகளின் நலனில் அக்கறை காட்டுவது போல அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி நாம் செயல்படல் அவசியமாகும்.

இன்று சிறுவர் தினத்தையொட்டி சிங்கள, தமிழ் முஸ்லிம் மாணவ மாணவிகள் இங்கு ஒன்று கூடி உள்ளனர். இவ்வாறான நிகழ்வுகளின் மூலமாக பல இன சமூகங்களோடு இணைந்து சமாதானமாக வளர வாய்ப்பு கிடைக்கிறது. எமது கலை, கலாசாரம், பண்பாடுகள் இதன் மூலமாக பாதுகாக்கப்படும். முப்பது வருட யுத்த வெற்றிக்குப் பின் இன்று இவ்வாறான சிறுவர் தின நிகழ்வில் அனைவரும் கூடி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும். இது நீடிக்கப்பட வேண்டும். ஒற்றுமை நீடிக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக