6 அக்டோபர், 2010

இந்தியாவில் நாச வேலை; பாக். உதவியது உண்மைதான் : முஷாரப் ஒப்புதல்

தனது ஆட்சியின்போது, இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு பயிற்சி அளித்தது உண்மைதான் என அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஜெர்மன் பத்திரிகை ஒன்றுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில்,

"காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் மீதுதான் சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

அணு ஆயுதங்களை ஏன் தயாரிக்கிறீர்கள்? காஷ்மீரில் அப்பாவி மக்களை ஏன் கொல்கிறீர்கள் என பாகிஸ்தானை அனைவரும் கேட்கின்றனர்.

1971இல் வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து தனி நாடாகப் பிரிந்தது. இதற்கு பின்னால் இந்தியா இயங்கிய போதிலும் எந்த ஒரு நாடும் அதுபற்றிக் கவலைப்படவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூட காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தவில்லை. அப்போது நான் இராணுவத் தளபதியாக இருந்தபோதிலும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

அதிபர் பொறுப்பை ஏற்று கார்கில் போரை தொடங்குவதற்கு உத்தரவிட்டேன். எனது ஆட்சியின்போது, காஷ்மீர் பிரச்சினைக்காகப் போராட தீவிரவாதிகளுக்கு அரசு தரப்பில் பயிற்சி கொடுத்தது உண்மைதான். தாய்நாட்டின் நலனுக்காகத்தான் அதை செய்தேன்" என்றார்.

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து உதவுவதாக இந்திய அரசு தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் புகார் செய்து வந்துள்ளது.

இது முஷாரப்பில் இந்த பேட்டி மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் முக்கிய தலைவர் ஒருவர் இதை ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக