6 அக்டோபர், 2010

பொன்சேகாவின் காலத்தில் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக 5244 இராணுவத்தினருக்கு தண்டனை *156 இராணுவ அதிகாரிகள் * 5088 இராணுவ வீரர்கள்




சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 156 இராணுவ அதிகாரிகளுக்கும், 5088 இராணுவ வீரர்களுக்கும் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொன்சேகா தளபதியாக இருந்த போது இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்புகளுக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அப்போதும் கையொப்பமிட்டு அனுமதியை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். அப்போது தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் சரத் பொன்சேகாவுக்காக மாத்திரம் எதிர்க்கட்சிகள் குரல்கொடுப்பது ஏன் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மேலும் உரையாற்றுகையில்:

பொன்சேகா தளபதியாக இருந்த காலத்தில் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட மேஜர் ஜெனரல் தரங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தின் மூலம் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகித்த மூன்று மேஜர் ஜெனரல்களே பொன்சேகா மீதான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை நடத்தினார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசத்தால் புகழப்பட்ட வீரர் ஒருவர் தேசத்துரோகத்தனமாக நடந்த குற்றச்சாட்டிற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இது மாத்திரமல்ல இதுபோன்று சம்பவங்கள் உலகின் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

முதலாவது உலக மகா யுத்தத்தின் போது வழிநடத்திய அந்நாட்டு தளபதி பலராலும் போற்றப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அவர் ஹிட்லருக்கு இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தாலும் அவரைக் கெளரவப்படுத்தும் வகையில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக