27 ஜூலை, 2010

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம்



நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறை வேற்றும் வகையிலேயே அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் இறைமை, பாதுகாப்பு, மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இம்மாற்றம் ஏற்படுத் தப்படுமென தெரிவித்த ஜனாதிபதி, எவரதும் தனிப்பட்ட விருப்பு வெறுப் புக்கேற்ப இம்மாற்றம் அமையாது எனவும் தெரிவித்தார்.

அதேவேளை அரச சார்பற்ற அமைப்புக்கள் நாட்டைத் துண்டாடுவதற்கு உடன்படிக்கை மேற்கொண்டோரின் விருப்பத் திற்கேற்ப அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஹக்மன பிரதேச சபை கட்டடத் திறப்பு விழாவும் ஹக்மன நகர சபைக் கட்டடத் திற்கான அடிக்கல் நடும் வைபவமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று நடைபெற்ற, நகர சபைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்து அதனை யொட்டிய பொதுக் கூட்டத்தில் உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உட்பட மாகாண அமைச்சர்கள், முக் கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான் மைக்கு ஆறு ஆசனங்களே தேவையான நிலையில் அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள போதிய அதிகாரம் எமக் குள்ளது. எனினும் பல்தரப்பு கலந்துரையாடல்களுடன் இதனை மேற்கொள்வதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்நாட்களில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறோம். நிறைவேற்று ஜனாதிபதியாக தனித்திருப்பதைப் போன்று நான் உணர்கிறேன். பாராளுமன்றத்திற்கு வருகை தந்து அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கவும் நான் ஆவலாயுள்ளேன. இதற்கேற்ற விதத்திலேயே மாற்றம் இடம்பெறுவது அவசியம்.

இப்போதெல்லாம் கட்சித் தாவுதலைத் தடைசெய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கட்சிக்குள் வருவதற்கும் போவதற்குமான சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டுமென நான் கருதுகின்றேன். கட்சி மாறுதல் இல்லாதிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் உருவாகியிருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.

மக்கள் எம்மீது பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நாம் பொறுப்புடன் நிறைவேற்றி வருகின்றோம். தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருந்த யுகம் மாற்றப்பட்டுள்ளது.

நாம் மஹிந்த சிந்தனையின் முதற் கட்டமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் தொண்ணூறு வீதமானவற்றை நிறைவேற்றியுள்ளோம். இப்போது இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. நாம் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

மக்கள் ஆதரவுடன் பெரும் பலத்துடன் அரசாங்கம் என்ற ரீதியிலும் கட்சி என்ற ரீதியிலும் நாம் முன்னோக்கிப் பயணிக்கின்றோம். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி என்ற வகையில் எம்முடன் கைகோர்த்து செயற்பட சகலரும் முன்வரவேண்டும்.

நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்கால பரம்பரைக்காக நாட்டை அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (பிரதியமைச்சர்) :

ஹக்மன தேர்தல் தொகுதியிலிருந்து கடந்த தேர்தலில் 70.6 வீத வாக்குகள் ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

1994ம் ஆண்டிலிருந்து மாத்தறையில் ஐ. தே. கவில் வெற்றிபெற்று சரியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்குப் பூரண பங்களிப்பு வழங்கினேன். அதனை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் என்னை பாராளுமன்றத் தேர்தலில் முதலிடத்தில் வெற்றிபெறச் செய்தனர்.

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை உருவாக்கும் நடவடிக்கையில் ஹக்மன அபிவிருத்திக்காக 14,600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம். இன்றேல் நிறைவேற்று பிரதமர் முறையாவது கொண்டுவரப்பட வேண்டும். மக்கள்தான் வாக்களிப்பர், அதற்காக எதிர்க்கட்சி பயப்படத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக