27 ஜூலை, 2010

டெஸ்ட் கிரிக்கெட்: 2வது நாள் ஆட்டம் முடிந்தது- இந்தியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்; இலங்கை 642 குவித்து டிக்ளேர்


.



இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க நாளில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியது. பரணவிதனா, சங்ககரா சதம் அடித்தனர். இந்தியாவின் பந்து வீச்சு மீண்டும் எடுபடவில்லை.

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 2 விக்கெ இழப்புக்கு 312 ரன் எடுத்து இருந்தது. சங்ககரா 130 ரன்னுடனும், ஜெயவர்த்தனே 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.

சங்ககராவும், ஜெயவர்த்தனேயும் இந்திய பந்து வீச்சாளர்களை விளாசி தள்ளி ரன் குவித்தனர்.

கேப்டன் சங்ககரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 304 பந்துகளில் 27 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை தொட்டார். இது அவரது 7-வது இரட்டை சதம் ஆகும்.

இதேபோல் மறுமுனையில் இருந்து ஜெயவர்த்தனேயும் பொறுப்புடன் ஆடினார். மதிய உணவு இடைவேளை வரை இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் போனது மிகுந்த பரிதாபமே.

சங்ககரா, ஜெயவர்த்த னேவின் அதிரடியான ஆட்டத்தால் இலங்கை அணி ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது.

மதிய உணவு இடை வேளையின்போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 457 ரன் குவித்து இருந்தது. சங்ககரா 214 ரன்களிலும், ஜெயவர்த்தனே 71 ரன்னிலும் ஆட்டம் இருக்காமல் இருந்தார்.மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை ஷேவாக் பிரித்தார்.

சங்ககரா 219 ரன்னில் “அவுட்” ஆனார். அவர் 335 பந்துகளில் 29 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். 3-வது விக்கெட் ஜோடி 393 ரன் எடுத்தது.

சங்ககரா ஆட்டம் இழந்தபோது இலங்கை அணியின் ஸ்கோர் 466ஆக இருந்தது. ஜெயவர்த்தனே 80 ரன்னில் இருந்தார்.

அடுத்து ஜெயவர்த்தனேயுடன் சமரவீரா ஜோடிசேர்ந்தார். இருவரும் இந்திய பந்து வீச்சை துவசம் செய்தனர். ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து சமரவீரா அரைசதம் அடித்தார். இதனால் இலங்கை அணியில் ஸ்கோர் 600 ரன்னை நோக்கி சென்றது. சதம் அடித்த ஜெயவர்த்தனே அதிரடியாக விளையாடினார். அவரும் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்னில் ஹர்பஜன் பந்தில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ரன்னுடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சமரவீரா 76 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சேவாக் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

இதனால் இந்தியா 8 ஓவரில் 50 ரன்னை கடந்தது. சிறப்பாக விளையாடி சேவாக் அரைசதம் அடித்தார். அவர் 50 பந்து சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் 79 ரன்னாக இருந்தது. இந்தியாவின் ஸ்கோர் 95 ரன்னாக இருக்கும்போது 2வது நாள் ஆட்டம் முடிந்தது, ஆட்ட இறுதியில் சேவாக் 64 ரன்னுடனும், விஜய் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா நாளை தொடர்ந்து விளையாடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக